பக்ரீத் விடுமுறை ரத்து: ராஜஸ்தான் பாஜக அரசு உத்தரவால் சர்ச்சை!

ஜெய்ப்பூர்: இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் பா.ஜனதா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைப் பின்பற்றி சத்தீஸ்கர் மாநிலமும் ஜைன மதத்தின் பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இந்த சர்ச்சை நீடித்து கொண்டிருக்கும் போது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் அரசின் உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களின் 2 முக்கிய பெருநாள்களில் ஒன்றான பக்ரீத் வரும் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 25ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த தலைவர் தீன் தயாள் உபாத்யாய் பிறந்த நாள் வருகிறது.

எனவே அன்று பள்ளி, கல்லூரிகளை திறந்து வைத்து ரத்த தானம் முகாம்களை நடத்துமாறு அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் விருப்பப்பட்டால் இஸ்லாமிய ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என கூறியுயள்ள ராஜஸ்தான் அரசு, அதற்கான எழுத்துப்பூர்வமான ஆணை எதுவும் பிறப்பிக்கவில்லை.

பக்ரீத்திற்கு விடுமுறை இல்லை என்ற அரசின் உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்புகள், இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கனவே சூரிய நமஸ்காரம், யோகா பயிற்சி ஆகியவற்றை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்கியுள்ள ராஜஸ்தான் அரசு, இப்போது பக்ரீத் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!