வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (16/09/2015)

கடைசி தொடர்பு:19:21 (16/09/2015)

27 வெளிநாட்டு பயணம்... நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள்!

டந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 27 முறை வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி. இந்த பயணத்தின்போது முக்கிய நாடுகளுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த ஒரு மினி ஸ்கேன் ரிப்போர்ட் இங்கே...

பூட்டான் (ஜூன் 15 - 16, 2014)

பூட்டான் மன்னர்  ஜிக்மே கேசர் நம்ஜியேல் வாங்சங்கின் அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி. இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்துகொள்ளப்பட்ட ஒப்ப்பந்தங்கள் கூட்டறிக்கையாக வெளியிடப்பட்டன. அவற்றின் முக்கிய அம்சங்கள்:

*   இந்தியாவிலிருந்து பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.

*  தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்புடனும், கூட்டுறவுடனும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இரண்டு நாடுகளும் உடன்பாடு.

*  இருநாடுகளும் தமது பிரதேசங்களை, எதிரி நாடுகள் தமது தேசிய நலனுக்காக பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை

பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா பயணம் (ஜூலை 13 – 15, 2014)

பிரேசிலில் நடந்த ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, " அமைதி மற்றும் நிலையான சூழ்நிலையை மீண்டும் கொண்டு வருவதே உலகில் அவசரத் தேவையாகும். இதற்காக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே உள்ள சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ் புதிய கண்ணோட்டத்தையும், வழிமுறைகளையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். அதனால் நமது உறவு மற்றும் அமைப்பின் வளர்ச்சி இந்த அடிப்படை நோக்கத்தைத் தக்க வைத்துக்கொள்வதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அமைதியான, சீரான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதில் பிரிக்ஸ் குரல் ஒன்றுபட்டதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

தீவிரவாதம், இணையப் பாதுகாப்பு, பருவ நிலை மாற்றம் போன்ற உலகத்தின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள நமது ஒத்துழைப்பை நாம் இன்னும் பலப்படுத்த வேண்டும்" என்றார்.

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி தொடக்கம்

இந்நிலையில், மாநாட்டின் முக்கிய அம்சமாக ஃபோட்லெசா பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் 'புதிய வளர்ச்சி வங்கி' தொடங்கப்பட்டது.

நேபாளம் (ஆகஸ்ட்  3-4, 2014)

17 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்நாட்டுக்குக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமரான நரேந்திர மோடிக்கு தலைநகர் காத்மாண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வழக்கத்துக்கு மாறாக, நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா, விமான நிலையத்துக்கு நேரில் வந்து மோடியை வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நேபாள நாடாளுமன்ற அலுவலகத்தில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

3 ஒப்பந்தங்கள்

*  நேபாளத்துக்கு இந்தியா அயோடின் கலந்த உப்பு வழங்கும். இதற்காக இந்திய ரூபாயில் சுமார் 4.5 கோடி நிதி உதவி வழங்கப்படும்

* பஞ்சேஸ்வர் பன்னோக்குத் திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உடன்பாட்டில் இரு பிரிவுகளில் திருத்தம் கொண்டு வருவது.

* இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் மஹாகாளி நதியின் குறுக்கே நீர் மின் திட்டம்

ஜப்பான் (ஆகஸ்ட் 30- Sep 3, 2014)

5 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற மோடி கியோட்டோ நகருக்கு சென்றடைந்தபோது, சிறப்பு நிகழ்வாக அவரை வரவேற்க டோக்கியோவில் இருந்து ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே சென்றார். அங்கு இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், சென்னையை அடுத்த பொன்னேரி உள்ளிட்ட 100 இடங்களை நவீன நகரங்களாக மாற்றும் திட்டத்தில், முதல் கட்டமாக வாரணாசியை கியோட்டோ போன்று நவீன நகரமாக மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய–ஜப்பான் இடையே, மோடி முன்னிலையில் கையெழுத்தானது.

5 ஒப்பந்தங்கள்

அதைத் தொடர்ந்து டோக்கியோ சென்ற பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். ராணுவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பதற்காக 5 இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அமெரிக்கா (செப்டம்பர் 26-30, 2014)

ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, அதிபரின் வெள்ளை மாளிகையில் இரவு விருந்தளித்தார் பராக் ஒபாமா. அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்காற்றுவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில் இரு தலைவர்களும், இந்தியா - அமெரிக்காவின் நலன்களுக்காக மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலக நாடுகள் பயனடையும் வகையில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என குறிப்பிட்டிருந்தனர்.

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணைந்து பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்வதாகவும் அதில் மேலும் தெரிவித்திருந்தனர்.

மியான்மர் (நவம்பர் 11 - 13, 2014)

மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நடைபெற்ற 9ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனப் பிரதமர் லீ கேகியாங் உள்பட 18 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பான கிழக்காசிய உச்சி மாநாட்டின் பிரகடனத்தை இந்தியா ஆதரிப்பதாக தெரிவித்தார்.

அதேசமயத்தில், அனைத்து விதமான தீவிரவாதச் செயல்களுக்கும் எதிரான போரில் சர்வதேச அளவிலான தோழமை அவசியம் என்று கூறிய மோடி, சரக்குகள், சேவைகளுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கும் சமச்சீரான பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் செழுமைக்கும் இது வழிவகுக்கும் என்றார்.

ஆஸ்திரேலியா (நவம்பர் 14-18, 2014)

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்களை சந்தித்துப்பேசினார்.

இந்நிலையில் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பேசிய மோடி, கறுப்பு பணம் பதுக்கும் விவகாரம் நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயம் என்றும், அடுத்த தலைமுறைகள் உட்கட்டமைப்பு வசதியை உருவாக்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். மேலும் நவீன உள் கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் மயமாதல், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கான்பெர்ராவில் உள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற சென்றார் மோடி. இரு தலைவர்களும் பாராளுமன்ற அலுவலகத்தில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

அப்போது சமூக பாதுகாப்பு, தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது, போதைப் பொருள் வர்த்தகத்தை எதிர்த்து போராடுவது, சுற்றுலா வளர்ச்சி, கலை மற்றும் கலாசார மேம்பாடு ஆகிய 5 முக்கிய ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான சிவில் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல், விரிவான பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது ஆகியவற்றுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

செஷல்ஸ் (மார்ச் 10-11, 2015)

இந்திய பெருங்கடல் தீவுகளுக்கான மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு பகுதியாக செஷல்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டின் அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மிச்செலை  சந்தித்துப் பேசினார்.

4 ஒப்பந்தங்கள் 

இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நீர் வளம், நீரின் தரம் உள்ளிட்டவை குறித்த ஆய்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு உள்ளிட்டவை அதில் இடம் பெற்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோடி, "நீர்வள ஆய்வு தொடர்பான ஒப்பந்தமானது நமது கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய பரிமாணமாகும்.
நமது பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாக உள்ளது.

செஷல்ஸூக்கு இரண்டாவது ஆளில்லா உளவு விமானத்தை வழங்கப்படும். அந்நாட்டு மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச விசா வழங்கப்படும். இந்த விசாக்கள் அவர்கள் இந்தியா வந்து இறங்கியதும் வழங்கப்படும்" என்றார்.

மோரீஷஸ் (மார்ச் 11-12, 2015)

செஷல்ஸ் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு மோரீஷஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜகந்நாத்தை சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

5 ஒப்பந்தங்கள்

* இந்தியா-மோரீஷஸ் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு

* மோரீஷஸின் அகலிகா தீவுக்கு கடல் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்,

* கலாசார ஒத்துழைப்பு

* பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்பு

* இந்தியாவில் இருந்து மாம்பழ இறக்குமதி செய்வது உள்ளிட்ட வேளாண் துறை ஒத்துழைப்பு

இலங்கை (மார்ச் 13-14, 2015)

1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற வரலாற்று சிறப்புடன் அந்நாட்டிற்கு சென்றார் நரேந்திர மோடி. அங்கு அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே விசா நீடிப்பு, சுங்கத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

4 ஒப்பந்தங்கள்

*  ராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம்

* சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம்

* இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம்

* இலங்கையில் இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவது
 
பிரான்ஸ் (ஏப்ரல் 09-11, 2015)

நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது, அணுமின் நிலையம் அமைப்பது உட்பட 17 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின.

முக்கிய ஒப்பந்தங்கள்

* பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவது

*  மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்த்தாப்பூரில் 6 அணு உலைகளை அமைப்பது

* டெல்லி-சண்டிகர் இடையே மணிக்கு 200 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கும் திட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து ஆய்வில் ஈடுபடுவது

* இந்தியா-பிரான்சின் கூட்டுத் தயாரிப்பிலான செயற்கைக்கோளிடமிருந்து தகவல்களைப் பெறுதல்

* பொருளாதாரத் துறை மேம்பாடு

* தகவல் பரிமாற்றம்,

* ஆயுர்வேத மருத்துவம்

* சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம்

ஜெர்மனி (ஏப்ரல் 12-14, 2015)

பிரான்ஸில் நான்கு நாட்கள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஜெர்மனி சென்றார். ஹன்னோவர் நகரில் நடைபெற்ற ஜெர்மன் தொழிலதிபர்களின் கூட்டத்தில் பேசிய மோடி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ( மேக் இன் இந்தியா ) திட்டத்தில் இணையுமாறு தொழிலதிபர்களை கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சிலா மார்கேலுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஒப்பந்தங்கள்

* இந்தியாவின் 'மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உதவும் விதமாக இந்தியாவின் உற்பத்தி துறையில் ஜெர்மன் முதலீடு

* நகர்ப்புற மேம்பாடு

* சுற்றுச்சூழல்

* இந்திய ரயில்வே துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது

* கங்கை உள்ளிட்ட நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தொழில் நுட்ப மற்றும் நிதி உதவி

* உயர் கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு

*  இரு நாடுகளின் மொழிகளை பரஸ்பரம் இரு நாட்டு இளைஞர்களிடம் பரப்புதல்

* அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் ஒத்துழைப்பு

கனடா (ஏப்ரல் 14-17, 2015)

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு கனடா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. கனடா பிரதமர் ஹார்பருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர்,  இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு யுரேனியம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. கேம்கோ மற்றும் இந்திய அணு சக்தி கமிஷன் ஆகியவை இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தம்

* ரூ.1,600 கோடி மதிப்பிலான 3 ஆயிரம் டன் யுரேனியத்தை கனடா இந்தியாவுக்கு வழங்கும். இந்த யுரேனியத்தை 2020ம் ஆண்டு வரை வழங்கும். 

* கனடா மக்கள் இந்திய விசாவை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த விசா 10 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும்.

* தீவிரவாத்திற்கு எதிரான போரில் இருநாடுகளும் சேர்ந்து போராடுவது என்று முடிவு 

இந்தியாவுக்கு கிடைத்த பலன்

கனடாவின் யுரேனியம் சப்ளை மூலம் இந்தியாவின் மின்சார, எரிசக்தித் தேவைகள் நிறைவு செய்யப்படும்.

சீனா (மே 14-16, 2015)

மூன்று நாள் பயணமாக, சீனாவுக்கு சென்ற பிரதமர் மோடி, பீஜிங் நகரில் அந்நாட்டு பிரதமர் லி கெகியாங்கை சந்தித்து பேசியதை அடுத்து,  இந்திய - சீன வர்த்தக நிறுவனங்கள் இடையே 22 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.39 லட்சம் கோடி) மதிப்பிலான, 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஒப்பந்தங்கள்

* சீன வளர்ச்சி வங்கி, தொழில், வர்த்தக வங்கி ஆகியவை இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,860 கோடி) கடனுதவி வழங்குவது.

* சீனாவின் கோல்டன் கன்கார்டு ஹோல்டிங்ஸ்- இந்தியாவின் அதானி குழுமம் இணைந்து குஜராத் மாநிலம், முந்த்ரா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒருங்கிணைந்த சூரிய மின்சக்தி பூங்காவை உருவாக்குவது.

* குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம் - சீனாவின் குவாங்சுவா துறைமுகம் இடையே சகோதரத்துவ உறவை உருவாக்கும் வகையில் அதானி குழுமம்- குவாங்குசுவா துறைமுக நிர்வாகம் இடையே ஒப்பந்தம்.

* இந்தியாவின் வெல்ஸ்பன் எனர்ஜி நிறுவனமும், சீனாவின் டிரினா சோலார் நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் 500 மெகா வாட் சூரியவிசை மின் உற்பத்தி, 500 மெகாவாட் சூரிய மின்கலம் அமைப்பது.

* திரைப்படம், பொழுதுபோக்குத் துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு அளிப்பது.

* இந்தியாவின் ஐ.எல்.எஃப்.எஸ் - சீனாவின் தொழில், வர்த்தக வங்கி இடையே வர்த்தக ஒப்பந்தம்.

* 4,000 மெகாவாட் திறனில் செயல்படவுள்ள லைஜா அனல் மின் திட்டத்துக்காக, ஐ.எல்.எஸ்.எஸ் - சீனாவின் ஹுவானங் குழுமம் இடையே ஒப்பந்தம்.

* ஜிண்டால் பவர் அண்ட் ஸ்டீல் - சீனாவின் தொழில், வர்த்தக வங்கி இடையே ஒப்பந்தம்.

* இந்தியாவின் இன்ஃபோசிஸ்- சீனாவின் கின்னான் மாகாண அரசும் இணைந்து, கின்னானில் 'சீனா - இந்தியா தகவல் சேவை மையம்' அமைப்பது.

* ஜிண்டால் பவர் அண்ட் ஸ்டீல் - சீனாவின் தொழில், வர்த்தக வங்கி இடையே ஒப்பந்தம்.

* இந்தியாவின் இன்ஃபோசிஸ்- சீனாவின் கின்னான் மாகாண அரசும் இணைந்து, கின்னானில் 'சீனா - இந்தியா தகவல் சேவை மையம்' அமைப்பது.

* பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனமும், சீனாவின் தேசிய தொழில்நுட்ப ஏற்றுமதி, இறக்குமதிக் கழகமும் இணைந்து, குஜராத்தில் ஒருங்கிணைந்த உருக்காலைத் திட்டத்தை தொடங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தென்கொரியா (மே 18-19, 2015)

சீனா மற்றும் மங்கோலியாவைத் தொடர்ந்து தென் கொரியா சென்ற பிரதமர் மோடி,  அந்நாட்டு அதிபர் பார்க் குயின்யேயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு அளிப்பது  உள்ளிட்ட  7 முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின.  

7 ஒப்பந்தங்கள்

*  இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பது,

* ஒலி-ஒளி கூட்டு தயாரிப்பில் இணைந்து செயல்படுவது,

* மின்சக்தி வளர்ச்சி மற்றும் புதிய மின் தயாரிப்பில் இணைந்து செயலாற்றுவது

* தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்கள் மட்டத்தில் கூட்டாக செயல்படுவது

* இளைஞர்கள் நலனில் இரு நாட்டு விளையாட்டுத் துறையும் இணைந்து செயல்படுவது,

* சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் கூட்டாக செயல்படுவது,

* கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தில் இணைந்து செயல்படுவது

வங்கதேசம் (ஜூன் 6-7, 2015)

வங்கதேசத்திற்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க, நில எல்லை ஒப்பந்தம் உட்பட  22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பஸ் போக்குவரத்து துவக்கம்

மேலும் இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா - வங்கதேசம் இடையே 2 பஸ் போக்குவரத்து சேவை  தொடங்கப்பட்டது. இவற்றில்  ஒன்று கொல்கத்தா - டாக்கா - அகர்தலாவுக்கும் (திரிபுரா), மற்றொன்று டாக்கா - ஷில்லாங் (மேகாலயா) - கவுஹாத்திக்கும் (அசாம்) செல்லும்.
 
22 ஒப்பந்தங்கள்

* எல்லைப் பகுதியில், சர்ச்சைக்குரிய நிலங்களை பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க, நில எல்லை ஒப்பந்தம்,

* இந்தியா -   வங்கதேசம் இடையே கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பது,

* ஆள் கடத்தலை தடுப்பது,

* கள்ள நோட்டு புழக்கத்துக்கு எதிரான நடவடிக்கை  

* வடகிழக்கு பிராந்தியத்தில் தீவிரவாதத்தை  ஒழிப்பதற்கு, வங்கதேசம் தேவையான உதவிகளை செய்யும்

* வங்கதேசத்தின் கட்டமைப்பு பணிகளுக்காக, இந்தியா 12,800 கோடி ரூபாய் கடன் வழங்கும்

உஸ்பெகிஸ்தான் (ஜூலை 6 - 7, 2015)

மத்திய ஆசியாவிலுள்ள உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, முதலில் சென்றது உஸ்பெகிஸ்தான். தலைநகர் தாஷ்கண்டில் அந்நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து  இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

3 ஒப்பந்தங்கள்  

*  இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அலுவலகங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது,

*  இருநாடுகளிடையே பரஸ்பரம் கலாசார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது

*  சுற்றுலா துறையில் பரஸ்பரம் இருநாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிப்பது

கஜகஸ்தான் (ஜுலை 7 - 8, 2015)

மத்திய ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் ஒரு அம்சமாக கஜகஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் நூர்சுல்தான் நஸர்பயேவ் உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

5 ஒப்பந்தங்கள்

பாதுகாப்பு, ரயில்வே, யுரேனியம் விநியோகம், விளையாட்டு மற்றும் தண்டனை கைதிகள் பரிமாற்றம் செய்வது, ஐ.நா. அமைதிப்படையில் கூட்டு நடவடிக்கை என ஐந்து துறைகளில், இந்தியா, கஜகஸ்தான் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா பயணம் (ஜூலை 8 – 10, 2015)

ரஷ்யாவில் உள்ள உஃபா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

நீர்மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தம்  

நீர்மின் உற்பத்தி திட்டங்களில் ஒத்துழைப்பது தொடர்பாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி நிறுவனத்துக்கும், இந்தியாவின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்திற்கும் இடையே உடன்பாடு கையெழுத்தானது.

இதுமட்டுமின்றி இந்தியா மேற்கொள்ளும் பெரும்பாலான ரயில்வே திட்டங்களில் ரஷ்யாவின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் முடிவு எட்டப்பட்டது.

பிரிக்ஸ் மாநாட்டு பிரகடனத்தில் முக்கிய அம்சம்

பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவாக வெளியிடப்பட்ட பிரகடனம் வெளியிடப்பட்டது.

அமைதி, பாதுகாப்பு, நீடித்த சீரான வளர்ச்சியை உறுதிபடுத்திடவும், வறுமை சமத்துவமின்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை ஒழித்திடவும் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற அம்சம் முக்கியமாக இடம் பெற்றிருந்தது.

துர்க்மெனிஸ்தான் (ஜூலை 10-11, 2015)

ரஷ்யாவில் நடைபெற்ற 'பிரிக்ஸ்' மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு துர்க்மெனிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் குர்பங்குலியை சந்தித்துப் பேசினார்.

7 ஒப்பந்தங்கள்

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே

* பாதுகாப்பு

* வெளியுறவு,

* அறிவியல் தொழில்நுட்பம்,

* மருந்தியல்,

* ரசாயன வினியோகம்,

* விளையாட்டு,

* சுற்றுலா ஆகிய துறைகளில் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஐக்கிய அரபு எமிரேட் (ஆகஸ்ட் 16 -17, 2015)

இந்தியா ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் இடையேயான கூட்டறிக்கை
 
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் இளவரசர்  முகமது பின் சைத் அல் நஹ்யானி அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு சென்ற பிரதமர்  நரேந்திர மோடி, அவருடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, இரு தலைவர்களும் பின்வருவனவற்றுக்கு ஒப்புக் கொண்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்  

* இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை மேம்படுத்துவது.

* அரசியல் காரணங்களுக்காக மதத்தை பயன்படுத்தி சில நாடுகளில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் குழுக்களுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்படுவது.
 
* சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனைகளை தடுப்பது, தனிநபர் மற்றும் அமைப்புகள் சட்ட விரோதமாக செயல்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது இது குறித்த தகவல்களை திரட்டுவது ஆகியவற்றை இரு நாடுகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும்.

* போதைப் பொருட்கள், கருப்புப் பணப்பரிமாற்றம், நாடுகளுக்கு இடையே ஏற்படும் குற்றங்கள் ஆகியவற்றை தடுப்பது போன்றவற்றில் கூட்டாக செயல்படுவது.

*  இந்தியாவில் ராணுவ தடவாளங்களை தயாரிக்க கூட்டுறவு முயற்சி.

* முதலீட்டு வாய்ப்புகளுக்கு இந்தியா புதிய இடமாக இருப்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது.  

*  ஐக்கிய அரபு எமிரேட்டின் கட்டமைப்பு வசதிகளுக்கான மேம்பாட்டு செயல்பாடுகளில் இந்திய நிறுவனங்களை பங்கு கொள்ள செய்வது.

* எரிசக்தி பிரிவில் குறிப்பாக பெட்ரோலிய பிரிவில் குறிப்பிடத்தகுந்த நட்புறவை மேம்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவிற்கு தேவையான பெட்ரோலியத்தை அளிப்பது.

* இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தை மேம்படுத்தி,  கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 சதவீத வர்த்தகத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்தல்.

*  ஐக்கிய அரபு எமிரேட்டில் குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை அமைத்து இந்திய வல்லுனர்களை அதற்கு பயன்படுத்துவது. இதனால், இந்திய நிறுவனங்களும் பயன் பெறும்.

*  ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் இந்திய பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சி கூடங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு இப்பிரிவை மேலும் வலுவுள்ளதாக்குதல்.
 
*  விண்வெளி ஆராய்ச்சியிலும் கூட்டுறவுடன் செயல்படுதல். செயற்கை விண்கலன்களை கூட்டு முயற்சியுடன் தயாரிப்பது அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

*  அமைதியான முறையில் விவசாயம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் அணுசக்தியைப்  பயன்படுத்த ஒத்துழைப்பு.

* கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை மேம்படுத்த இரு நாடுகளும் ஒத்துழைக்கும்.

*  இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களின் தொடர்பு இந்திய ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு இடையே உள்ள உறவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இரு நாடுகளும் மக்களின் நன்மைக்காக குறிப்பாக தொழிலாளர்களின் நன்மைக்காக இதை வலுப்படுத்துவது தொடரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்