ஐந்து வருடங்களுக்கு முன், மும்பையைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் 5 வயதுக் குழந்தையை சிறார் வதை செய்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த முதியவர் கைது செய்யப்பட்டார். தற்போது, போதுமான சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தினால் மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2016-ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமியின் தாய் தன் குழந்தையுடன் இணைந்து தொலைக்காட்சியில் குற்றப் பின்னணி கொண்ட நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் சிறுமி ஒருவரை முதியவர் ஒருவர் சிறார் வதை செய்வது போன்று காட்டப்பட்டிருந்ததுடன், நிகழ்ச்சியின் இறுதியில் பெண் குழந்தைகளுக்கான தொடுதல் குறித்த விழிப்புணர்வு பகுதியாக `குட் டச், பேட் டச்' பற்றியும் ஒளிபரப்பினார்கள். அதைப் பற்றி சிறுமியின் தாய் சிறுமியிடம் பேசியபோது, தனக்கும் அதுபோல நடந்ததாகவும், பக்கத்து வீட்டில் வசித்த வந்த் 55 வயதான முதியவர் தன்னை பேட் டச் செய்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அந்த முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், ஐந்து வருடங்கள் கழித்து தற்போது, சிறுமியால் தெளிவாக குற்றம் நடந்த இடம், நேரம் குறித்த தகவல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாலும், குற்றம் சாட்டப்படுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும் அவரை விடுவிப்பதாக மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவரின் மகன் தனது வாதத்தில், ``2016-ம் ஆண்டு நவராத்திரி பண்டிகையின் போது சிறுமியின் தந்தை என்னிடம் பாடல்களை இசைக்க டிஜே செட் கேட்டிருந்தார், அதற்குப் பணம் தருவதாகவும் கூறியிருந்தார். அதனால் ஒரு வாரமாக அவரது வீட்டிற்குச் சென்று பாடல்களை இசைத்தேன். ஆனால் அவர் என்னிடம் கூறியபடி எனக்குப் பணம் எதுவும் தரவில்லை. அதை பற்றி கேட்கச் சென்ற என் தந்தையை அடித்துத் துரத்தினர். மேலும், என் தந்தை மீது இதுபோல பொய்யான குற்றச்சாட்டை காவல்துறையில் தெரிவித்தார்" என்று கூறியிருந்தார்.