வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (26/11/2015)

கடைசி தொடர்பு:13:36 (26/11/2015)

மோடியை ஹீரோவாக காட்டும் படம் திரையிடல்: சென்சார் போர்டு தலைவர் பதவி நீக்கம்?

த்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெறாமல் பிரதமர் நரேந்திர மோடியை ஹீரோவாக சித்தரித்து எடுக்கப்பட்ட 'மேரா தேஷ்  கா மகான்' என்ற செய்தி படத்தை,  தியேட்டர்களில் ஒளிபரப்ப வைத்ததாக, மத்திய சினிமா தணிக்கை குழுவின் தலைவர் பெகலாஜ் நிகாலனி பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா தியேட்டர்களில் இடைவேளைகளில் திரையிடுவதற்காக  ''மேரா தேஷ் கி மகான் மேரா தேஷ் கி ஜவான்'' என்ற பெயரில் செய்தி படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி படத்தில்  பிரதமர் மோடிதான் ஹீரோ. இமயமலையில் யோகா செய்வதில் இருந்து பல்வேறு உலக நாட்டுத்  தலைவர்களிடையே அவர் வலம் வருவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
                      

சுமார்  7 நிமிடங்களுக்கு மேல் ஓடும், இந்த செய்தி படம் நடிகர் சல்மான்கான் நடித்த ''பிரேம் ரதன் தான் பாயோ '' படத்தின் இடைவேளைகளில்  ஒளிபரப்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஆனால் 7  நிமிடங்களுக்கு  மேல் ஓடும் இந்த செய்தி படத்தை ஒளிபரப்ப தியேட்டர் ஆபரேட்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், துபாய் எக்ஸ்பிரஸ் சாலை, மாஸ்கோ சர்வதேச வர்த்தக மையம் போன்றவை இந்தியாவில் இருப்பது போலவும் இந்த செய்தி படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இதனால்  சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதற்கிடையே இந்த செய்தி படத்தை, மத்திய  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமலேயே பெகலாஜ் நிகாலனி, தியேட்டர்களுக்கு விநியோகம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெகலாஜ் நிகாலனியை பதவி நீக்கம் செய்ய,  மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம்தான் பெகலாஜ் நிகலானி சென்சார் போர்டு தலைவராக பொறுப்பேற்றார். 23 பேர் உறுப்பினர்களாக கொண்ட இந்த குழுவில் இவர் தலைவராக  பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்