Published:Updated:

கொரோனாவால் பள்ளிப்படிப்பை கைவிடும் சிறுமிகள்; 560 குழந்தை திருமணங்களை நிறுத்திய மகாராஷ்டிரா!

Marriage - Representational Image
Marriage - Representational Image

நகரங்களில் அதிகப்படியான கண்காணிப்புகள் இருப்பதால், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இது போன்ற திருமணங்களை சொந்த ஊருக்குச் சென்று நடத்துகின்றனர் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பொதுமுடக்கத்தின் போது அதிக அளவில் குழந்தை திருமணங்களை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருந்து, குழந்தை திருமணங்களை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 560 குழந்தை திருமணங்கள் அவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இது போன்ற குழந்தை திருமணங்கள் அதிக அளவில் மகாராஷ்டிராவின் கிராமப் பகுதிகளில்தான் நடக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 360 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 200 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சோலாப்பூர் மாவட்டத்தில் 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

Girl child
Girl child
Pixabay
அதிகரிக்கும் குழந்தை திருமணம், கண்டுபிடிக்கப்பட்ட 509 கர்ப்பிணிகள் - என்ன சொல்கிறார்கள் திருச்சி அதிகாரிகள்?

அடுத்ததாக, அவுரங்காபாத்தில் 37 குழந்தை திருமணங்களும், உஸ்மனாபாத்தில் 35 குழந்தை திருமணங்களும், நாண்டெட்டில் 32 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெரு நகரான மும்பையும் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பவில்லை. அங்கு 8 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

நகரங்களில் அதிகப்படியான கண்காணிப்புகள் இருப்பதால், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இது போன்ற திருமணங்களை சொந்த ஊருக்குச் சென்று நடத்துகின்றனர் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 82 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அதேபோன்று கொரோனா இரண்டாவது அலை அதிகமாக இருந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 71 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்
ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணம்; போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேர் கைது!

`கொரோனா பொதுமுடக்கத்தின் போது போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் பெற்றோர்கள் ஒரு பக்கம், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள் ஒரு பக்கம், லாக்டௌனில் திருமணச் செலவுகள் குறைகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம் என, இவை எல்லாம் சேர்ந்து பெற்றோர்களை தங்கள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் முடிவை எடுக்க வைக்கின்றன' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பொது முடக்கம் தளர்த்தப்பட்ட அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குழந்தை திருமணங்கள் குறைவாகவே நடந்துள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் யசோமதி இது குறித்து கூறுகையில், ``குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் 5 மாவட்டங்களில், குழந்தை திருமணத்தைத் தடுக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி மூலம் இது போன்ற குழந்தை திருமணங்களை தடுத்து வருகிறோம். அதிகமான பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்களை திரும்ப கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறோம். குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு