தமிழக பக்தர்கள் வருகை குறைவால் சபரிமலைக்கு 18 நாட்களில் ரூ.13 கோடி இழப்பு!

திருவனந்தபுரம்: தமிழக பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்ததால் சபரிமலைக்கு 18 நாட்களில் ரூ.13 கோடி வருமான இழப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மண்டல பூஜைக்காக சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு,  நேற்றுடன் 18 நாட்கள் நிறைவடைந்து உள்ளது. நடை திறந்த முதல் நாளில் இருந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மழை பெய்தாலும் தமிழகம் தவிர்த்த வெளிமாநில பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்தது.

தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்குச்  செல்லும் தமிழக பக்தர்களின் கூட்டம் வெகுவாகக்  குறைந்துவிட்டது. இதனால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்து உள்ளது.

கோவில் நடை திறந்த 18 நாட்களில் சபரிமலை கோவிலுக்கு கிடைத்த மொத்த வருமானம் ரூ.48.49 கோடியாகும். அதேசமயம் கடந்த வருடம் இதே நாளில் சபரிமலை கோவிலுக்கு கிடைத்த வருடம் ரூ.61.57 கோடியாகும்.

தமிழக பக்தர்கள் வருகை குறைவு காரணமாக சபரிமலை கோவில் வருமானம்,  இதுவரை ரூ.13 கோடி குறைந்துள்ளது. காணிக்கை மற்றும் பிரசாதம் மூலம் கிடைக்கும் வருமானம் வெகுவாக குறைந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் வெள்ளப் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டி சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில், மாளிகைபுரத்து அம்மன் கோவில், பம்பை கணபதி கோவில் ஆகிய இடங்களில் நேற்று சிறப்பு பூஜைகள், ஹோமங்களும் நடத்தப்பட்டன.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!