கார் விபத்து வழக்கிலிருந்து சல்மான்கான் விடுவிப்பு!

மும்பை: மும்பையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தோர் மீது காரை ஏற்றி ஒருவரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து இந்தி நடிகர் சல்மான்கான்விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர்மீதான குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கடந்த 2002 -ம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் இந்தி நடிகர் சல்மான்கான் தாறுமாறாக காரை ஓட்டியதில் சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏறியது.  சல்மான்கான் (49) ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.  இவ்வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல் முறையீடு செய்தார்.

 விசாரணையின்போது சல்மான்கான் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டி வந்ததற்கான ஆதாரத்தை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எனவே மரணம் விளைவிக்கும் குற்றம் செய்துள்ள சல்மான்கானுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சல்மான்கானை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது மும்பை உயர் நீதிமன்றம். அரசு தரப்பில் சல்மான்கான் மீதான குற்றத்தை சரிவர நிரூபிக்கவில்லை எனக் கூறி நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.

ஏன் இந்த தீர்ப்பு?

இந்த வழக்கில், நீதிபதி ஏ.ஆர். ஜோஷி அளித்த தீர்ப்பில், " இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு முழுமையாக தனது ஆதாரங்களை நிருபிக்கத் தவறி விட்டது.  அமர்வு நீதிமன்ற  விசாரணையில் பல்வேறு குளறுபடிகளும் குறைகளும் தென்படுகின்றன.

இந்த வழக்கில் சல்மான்கான்தான் கார் ஓட்டியதை நேரில் கண்ட ஒரே சாட்சியான  அதே காரில் வந்த போலீசுமான  ரவீந்தர பாட்டீலின் வாக்கு மூலத்தை மட்டும் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று கருதி விட முடியாது.  நீதிமன்ற விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்திலும் பல குளறுபடிகளை காண முடிகிறது. அதேவேளையில் ரவீந்தர பாட்டீல் வாக்குமூலம் ஒரு பகுதி உண்மையாக இருந்தாலும் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் வேறு எந்த சாட்சிகளையும் அரசு தரப்பு காட்டவில்லை. (கடந்த 2007-ம் ஆண்டு ரவீந்தர பாட்டீல் காசநோய் காரணமாக இறந்து போனார்)

இந்த விபத்து நடந்து சில மணி நேரம் கழித்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சல்மான்கான் குடித்திருந்ததாக ரவீந்தர பாட்டீல் சொல்லவில்லை. ஆனால் ரத்த மாதிரி பரிசோதனையில் சல்மான்கான் குடித்திருப்பது தெரிய வந்த பிறகு அறிக்கைக்கு ஏற்ற மாதிரி அவர் மாற்றி சொல்வதாக கருத வேண்டியது இருக்கிறது.

விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் காரில் சல்மான்கானின் நண்பரும் பாடகருமான கமால் கானும் இருந்துள்ளார். அவரிடம் எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 2007-ம் ஆண்டு வரை கமால்கான் இந்தியாவில்தான் இருந்துள்ளார். அதற்குபின்தான் அவர்  வெளிநாட்டில் குடியேறியுள்ளார்.

மேலும் கண்ணால் கண்ட சாட்சிகள் குறைவாக இருக்கும் இந்த வழக்கில் கமால் கான் நிச்சயம் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். விபத்தை நேரில் கண்டதாக கூறப்படும் கமால்கானிடம் நீதிமன்றத்தில் எந்த விசாரணையும் நடத்தப்படாதது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக  சதி பின்னப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியது இருக்கிறது.

பாந்திரா ஹில் ரோடு பகுதியில் வந்தபோது  காரின் இடது பக்க முன் டயர் வெடித்துதான், கார் நடைபாதையில் பாய்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வாதிட்டுள்ளது. ஆனால் இந்த விபத்து நடந்த பிறகுதான், டயர் வெடித்துள்ளது என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.

சல்மான் கான் வழக்கில் அவரது டிரைவர் அசோக் சிங் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி , தான் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!