வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (19/12/2015)

கடைசி தொடர்பு:12:36 (19/12/2015)

ஆந்திர சட்டப்பேரவைக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு ஓராண்டு தடை!

ஐதராபாத்: ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக விமர்சித்ததால், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜாவுக்கு சபாநாயகர் ஓராண்டு தடை விதித்து உள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 'கால் மணி' விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. பணத் திண்டாட்டத்தில் இருப்பவர்கள், போன் செய்தால்போதும், வீட்டிற்கு வந்து பணம் அளிக்கப்படுகிறது. கொடுத்த பணத்திற்கு அதிக வட்டி வசூல் செய்ததோடு, கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மனைவி உள்பட வீட்டில் உள்ள பெண்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளிய அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள், போலீஸ் உள்பட உயரதிகாரிகள் மற்றும் குண்டர்கள் இணைந்து ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து, ஆந்திராவில் தற்போது இந்த பிரச்னை பெரிய அளவில் வெடித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர பிரதேச மாநில சட்டசபை கூட்டத்தொடர் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா எழுந்து பேசும்போது, ''விஜயவாடா பகுதியில் கந்து வட்டி கொடுமை நடக்கிறது. அதற்காக குடும்ப பெண்களிடம் கையெழுத்து வாங்குகின்றனர். பின்னர் பணத்தை தராதவர்களின் வீட்டில் உள்ள குடும்ப பெண்களை விபசாரத்துக்கு கட்டாயப்படுத்துகின்றனர். அது பற்றி முதலில் விவாதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரோஜாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரை பற்றி விவாதம் நடத்தப்படும் என்று கூறினார். உடனே ரோஜா எழுந்து,  " கால் மணி செக்ஸ் ராக்கெட்’ என்ற பெயரில் நடக்கும் சட்ட விரோத இந்த பண அழைப்பு கொடுமையை பற்றி பேசுமாறு தெரிவித்தால், அம்பேத்கர் பற்றி பேசுமாறு முதல்வர் கூறுகிறார். தற்போது நடக்கும் இந்த பிரச்னையை பற்றி பேச அனுமதிக்க வேண்டும்" என்றார்.

இதனால் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த களேபரத்துக்கு இடையில் மீண்டும் ரோஜா எழுந்து பேசும்போது, ''இந்த ‘செக்ஸ் ராக்கெட்’ குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பலர் தெலுங்கு தேசம் கட்சியினர். அதனால்தான் இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் மூடிமறைக்க முயல்கிறார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் உளவுத்துறை அதிகாரி உள்ளிட்டோர் எடுத்துக் கொண்ட படங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன" என்றார்.

இதைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜா உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்களும் வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் மதியம் மீண்டும் சட்டசபை கூடியதும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் அதே பிரச்னையை எழுப்பினர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது எழுந்த ரோஜா, ''இவர் ‘சி.எம். சந்திரபாபு நாயுடுவா? கால் மணி சந்திரபாபு நாயுடுவா?’ என்றார்.

இதற்கு தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், பேரவையில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்  ரோஜா மீது குற்றம் சுமத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சர் ஒய்.ராமகிருஷ்ணுடு உடன் ஆலோசனை நடத்திய சபாநாயகர் கே.சிவபிரசாத் ராவ், "அவையில் தரக்குறைவாக நடந்துகொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் எம்.எல்.ஏ ரோஜாவுக்கு ஓராண்டு தடை விதிக்கிறேன். தலைவர் ஜெகன்ரெட்டி உள்பட அக்கட்சியில் 50 எம்.எல்.ஏ.க்கள், பேரவை  நடவடிக்கைகளில் கலந்துகொள்ள, இந்த தொடர் முடியும் வரை தடை விதிக்கிறேன்’’ என்று  அறிவித்தார்.

அதன்பின் வெளியே வந்த ரோஜா, செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நான் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டித்து குரல் கொடுக்கிறேன். ஆனால் தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பி ஓட்டு போட்ட பெண்களுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்து விட்டார். ஒரு ஆண்டு எனக்கு தடை விதிக்க சபாநாயகருக்கு உரிமை இல்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்