சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்டுவார்கள்: நடிகை ரோஜா ஆவேசம்!

நகரி: சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு விரைவில் பெண்கள் முடிவு கட்டுவார்கள் என்று, நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா ஆவேசமாக கூறி உள்ளார்.

ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவை சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சிவபிரசாத் உத்தரவிட்டு உள்ளார். இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபையில் வற்புறுத்தியபோதும்,  அதனை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்,   சட்டசபை செயலாளர் சத்திய நாராயணாவை சந்தித்து, சபாநாயகர் சிவபிரசாத் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை வழங்கினர். அந்த நோட்டீஸில், அக்கட்சியின் 67 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்நிலையில், சட்டசபையில் ரோஜா பேசிய பேச்சின் வீடியோ காட்சியை அமைச்சர் சீனிவாசலு தொலைக்காட்சிகளுக்கு வழங்கி உள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ரோஜா, ''சட்டசபையில் என்னை பற்றி இழிவாக பேசிய தெலுங்குதேச எம்.எல்.ஏ. அனிதாவுக்கு நான் பதில் அளித்தேன். ஆனால், அனிதா பேசியது பற்றி எதுவும் காட்டாமல் எனது பேச்சை மட்டும் ‘எடிட்’ செய்து ஒளிபரப்பி உள்ளனர்.

சபாநாயகர் சிவபிரசாத் நடுநிலையாக செயல்படாமல் தெலுங்குதேச உறுப்பினர் போல செயல்பட்டு உள்ளார். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதை பேசினாலும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அவர்,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதில் அளித்து பேசினால் மைக்கை துண்டித்து விடுகிறார்.

மேலும், சந்திரபாபு நாயுடுவும் அவரது அரசும் பெண்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கிய கடனை ரத்து செய்வதாக கூறி முன்பு ஏமாற்றினார். இப்போது சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தும் பெண்களை போலீசை கொண்டு அடித்து கைது செய்கிறார். ஓட்டுப்போடும் எந்திரமாக மட்டுமே பெண்களை சந்திரபாபு நாயுடு பார்க்கிறார். அவரது ஆட்சிக்கு பெண்களே முடிவு கட்டுவார்கள். அந்த காலம் விரைவில் வரும்" என்றார் ஆவேசமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!