கும்பமேளாவை சீர்குலைக்க திட்டம்: உத்தரகாண்டில் 4 தீவிரவாதிகள் கைது!

புதுடெல்லி: கும்பமேளாவை சீர்குலைக்க திட்டம் தீட்டி இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் அதிரடியாக உத்தரகாண்டில் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானதளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2-ம் தேதி நடத்திய தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டன. பாதுகாப்பு படையினரின் இந்த தீவிர நடவடிக்கையால், கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்துக்கு உட்பட்ட மங்களூர் பகுதியில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.

அக்லாக் உர்-ரகுமான், முகமது ஒசாமா, முகமது ஆசிம் ஷா மற்றும் மெரோஸ் ஆகிய அந்த 4 பேரும் நேற்று டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர்கள் தீக்குச்சிகளின் முனைகளில் உள்ள வெடிமருந்தைக் கொண்டு நூதன முறையில் வெடிகுண்டுகளைத் தயாரிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அவர்கள் ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவை சீர்குலைப்பதற்காக, ஹரித்வார் வரும் ரயில்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து டெல்லி உயர் போலீஸ் அதிகாரி கூறும்போது, ''கைது செய்யப்பட்டு உள்ள 4 தீவிரவாதிகளும், இணையதளம் வாயிலாக சந்தேகத்துக்கிடமான செயல்களில் ஈடுபட்டது, கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நால்வரும் போலீஸாரின் கண்காணிப்பில் இருந்தனர். பட்டதாரிகளான அவர்கள் நால்வரும், ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு இணையதளங்களை வழக்கமாக பார்வையிட்டதுடன், அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சிலருடன் கட்செவி மூலம் தொடர்பு கொண்டிருந்தனர்.

தலைநகர் டெல்லி, ரூர்க்கியில் இருந்து ஹரித்துவார் செல்லும் ரயில்களில், ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளா ஆகியவற்றில் குண்டு வெடிப்பு நடத்த இந்த தீவிரவாதிகள் சதி செய்திருந்தனர். உளவுத்துறை சரியான நேரத்தில் எச்சரித்ததால் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கை, உத்தரப்பிரதேச போலீசாரின் ஒத்துழைப்பால் இந்த 4 தீவிரவாதிகளை எங்களால் கைது செய்ய முடிந்தது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!