சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரள அரசு

புதுடெல்லி: சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு மற்றும் 5 பெண் வழக்கறிஞர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி 2006–ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுவை கடந்த மாதம் 11-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, 1,500 ஆண்டுகளாக அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்லவில்லை என்று நீங்கள் (கோவில் நிர்வாகம்) கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? பெண்கள் கோவிலுக்குள் செல்வதை எந்த அடிப்படையில் தடுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், வயது, பாலினம் மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தின்படி பெண்கள் கோவிலுக்குள் செல்வதை தடுக்கும் அதிகாரம் இருந்தால் ஒழிய அவர்களை கோவிலுக்கு செல்லக்கூடாது என்று யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் ஒரு வாரத்துக்குள் இதுதொடர்பாக கேரள அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து, கேரள அரசு சார்பில் நேற்று (5-ம் தேதி) உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளை மாற்ற முடியாது. எனவே, சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது'' எனக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!