மும்பை தாக்குதல்: பாக். முகமூடியை கிழிக்கும் டேவிட் ஹெட்லி!

மும்பை தாக்குதல் சம்பவத்தை 'இந்தியாவின் இதயத்தில் ஈட்டியை பாய்ச்சியது பாகிஸ்தான்' என்று அமெரிக்க பத்திரிகை ஒன்று எழுதியது. அவர்கள் சொன்னதுபோல,  'பாகிஸ்தான் உளவுத்துறையின் (ஐ.எஸ்.ஐ) உதவியுடன்தான் மும்பை தாக்குதல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது'  என மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி,  ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.

அதோடு அந்த தாக்குதலுக்கான அனைத்து வேலைகளையும் ஹஃபீஸ் முகமது சயீத் தலைமையிலான லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் செய்ததாகவும், இதற்காக பல்வேறு அரசியல், அதிகார வட்டாரங்கள் மறைமுக உதவிகள் செய்ததாகவும்  அமெரிக்காவில் இருந்து கொண்டு  வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மும்பை நீதிமன்றத்திற்கு வாக்கு மூலம் கொடுத்துள்ளான் ஹெட்லி.

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில்,  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். புதன்கிழமை தொடங்கிய தாக்குதல் மூன்று நாட்களாக தொடர்ந்தது. ஒரே நேரத்தில் ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், காமா குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனை, தியேட்டர், சர்ச் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தி, பொதுமக்களை பிணையக் கைதிகளாக வைத்து பெரும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 நபர்கள் கொல்லப்பட்டனர். 320 நபர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டு அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று அஜ்மலுக்கு தூக்கு உறுதியானது. பாகிஸ்தான் எவ்வளவோ முயன்றும் அஜ்மலை காப்பாற்ற முடியவில்லை. இறுதியாக கடந்த 2012 நவம்பர் 21- ல் அதிகாலையில் புனே எரவாடா சிறையில் அஜ்மலை தூக்கிலிட்டனர்.

அதன் பிறகு மும்பை தாக்குதல் சம்பவத்தின் வழக்கு நடந்து கொண்டேயிருந்தது. இந்த சம்பவத்தில் மும்பைக்கு சுற்றுலா வந்த அமெரிக்க மக்களும் பாதிக்கப்பட்டனர். அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். மாநில முதல்வர் தேஷ்முக், துணைமுதல்வர் ஆர்.ஆர் பாட்டீலும் பதவி விலகினார்கள். பெரும் சர்ச்சைகள் இருந்து கொண்டே இருந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதை இந்தியா பல முறை தெரிவித்து வந்தது. இதற்கான ஆதாரங்களை கொடுத்த இந்தியா, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்நாட்டை வலியுறுத்தியது. இருப்பினும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி மீது,  பல்வேறு நாடுகளில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அமெரிக்காவில் நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, அமெரிக்க சிறையில் விசாரிக்கப்பட்டு வருகிறான்.

ஹெட்லியை விசாரிக்க இந்திய தேசிய புலனாய்வு படையினர் அமெரிக்கா சென்றனர். விசாரணையில் ஹெட்லி,  பாகிஸ்தான் தொடர்பு குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

"இந்தியாவின் இதயம் மும்பை என்பதால், வர்த்தக, பொருளாதார மையமாக மும்பை இருப்பதால் மும்பையை தேர்வு செய்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை திட்டமிட்டது. அதற்காக ஆறு முறை கூட்டம் நடத்தப்பட்டு, கடல் வழியாக சென்று தாக்குதல் நடத்த நான் பலமுறை அமெரிக்கா நாட்டின் பிரஜை போல பெயரை மாற்றி,  பத்துக்கும் மேற்பட்ட முறை மும்பைக்கு வந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆய்வு செய்தேன். எங்கெல்லாம் சென்று ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்தலாம் என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்தேன்.

இதை பாகிஸ்தான் உளவுத்துறை மேஜர் இக்பால் முன்னிலையில் சரிபார்க்கப்பட்ட பிறகு, மூன்று மாத காத்திருப்புக்கு பிறகு மும்பை தாக்குதல் லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சையீது ஒப்புதலுடன் நடத்தப்பட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவுப்படை பிரிவினர் பெரிதும் உதவி செய்தனர். உளவுத்துறை அதிகாரிகளுக்கு பணமும் வழங்கப்பட்டது. மேலும் உளவுப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மேஜர் இக்பால், சமீர் அலி எல்லா உதவியை செய்தனர்” என வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

டேவிட் கோல்மேன் ஹெட்லியின் பாஸ்போர்ட் ஆவணம், பயணம் செய்த தேதிகளில் எடுக்கப்பட்ட பயண சீட்டுகள், அவனது துருப்பு சீட்டின் தொடர்புகள் என்று பல்வேறு ஆவணங்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். மிக விரைவில் ஹெட்லியை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர  திட்டம் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஹெட்லியின் வாக்குமூலத்தை உலக நாடுகள் அனைத்தும் கவனமாக பார்த்திருக்கிறது. பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா, லண்டன், உள்பட பல்வேறு நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில்,  இந்த வாக்கு மூலம் இந்தியா- பாகிஸ்தான் இடையில் மீண்டும் உறவு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

- சண்.சரவணக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!