பெங்களூர் பள்ளியில் மீண்டும் சிறுத்தை: மக்கள் அச்சம்; பள்ளிக்கு விடுமுறை!

பெங்களூரு: பெங்களூரு பள்ளியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுத்தை நடமாட்டம் காணரமாக அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலம்,  பெங்களூரு வர்த்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்,  தனியாருக்கு சொந்தமான விப்ஜியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்திற்குள் கடந்த 7-ம் தேதி சுற்றி திரிந்த சிறுத்தையை கண்ட காவலாளி,  அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி, பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து,  பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுத்தையை பிடிக்கும் முயற்சியின்போது 3 வனத்துறை அலுவலர்களும், ஒரு மருத்துவரும் காயமடைந்தனர். சுமார் 14 மணி நேர போராட்டத்துக்குப் பின் மயக்க ஊசி போட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அதே பள்ளியில் மீண்டும் நேற்று இரவு சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. சிறுத்தையை இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிலர் பார்த்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம், பள்ளியில் இரண்டு சிறுத்தைகள் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். 


இரவு நேரத்தில் சிறுத்தையை பிடிப்பது கடினமாக இருக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளிக்குள் மீண்டும் சிறுத்தை புகுந்துள்ள தகவலை அடுத்துக்  அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளதுடன், அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!