Published:Updated:

`விடுப்பு வழங்காததால் மன உளைச்சல்?'- 5 இந்திய பாதுகாப்புப் படை வீரர்களை சுட்டுக் கொன்ற சக வீரர்

சத்தீஸ்கரில், பாதுகாப்புப் படையினரின் முகாமில் உள்ள வீரர்களுக்கி டையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு ( மாதிரி புகைப்படம் )

இந்தியா - சீனா எல்லையைப் பாதுகாக்க 1962-ம் ஆண்டு இந்திய - திபெத் மத்திய காவல் ஆயுதப்படை என்ற பிரிவை மத்திய அரசு ஏற்படுத்தியது. லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரை உள்ள இந்திய எல்லையை இந்தப் படை கண்காணித்துவருகிறது. பனிப்புயல், பனிச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களுடன் போராடி, 18,000 அடி உயரத்தில் நின்று எல்லையைப் பாதுகாக்கிறார்கள் இந்த வீரர்கள்.

இந்திய எல்லை
இந்திய எல்லை

இந்திய - திபெத் வீரர்களுக்கான பயிற்சி முகாம் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டுவருகிறது. இந்த ஆண்டு 45-வது பட்டாலியன் கேம்ப் தற்போது நடைபெற்றுவருகிறது. அந்த கேம்ப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில், பாதுகாப்புப் படை வீரர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 350 கி.மீ தொலையில் உள்ளது, நாராயண்பூர் மாவட்டம். இங்கு நடைபெறும் முகாமில்தான் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர், தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னுடன் பணியாற்றும் சக வீரர்கள் சிலரை சரமாரியாகச் சுட்டுள்ளார்.

இந்திய - திபெத் பாதுகாப்புப் படை
இந்திய - திபெத் பாதுகாப்புப் படை

அதைக் கண்ட பிற வீரர்கள், தாக்குதல் நடத்தியவரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்குள்ளே நடந்த இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் மோஹித் உறுதிசெய்துள்ளார்.

Vikatan

வீரர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்படுவதற்கான உண்மையான காரணம் இதுவரை வெளியாகவில்லை, ஆனால், தாக்குதல் நடத்திய வீரர் தனக்கு விடுப்பு வழங்காததால் வருத்தத்திலும் மன உளைச்சலிலும் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீரர்கள்
வீரர்கள்
மாதிரி புகைப்படம்

பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து விரைந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து, உயர் அதிகாரிகள் நாராயண்பூருக்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.