Published:Updated:

`எல்லாரையும் நம்ப வைத்துவிட்டார் மோடி’ - கைதுசெய்யப்பட்ட திஷா ரவி குறித்த 6 தகவல்கள்!

திஷா ரவி
திஷா ரவி

விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட திஷா, விசாரணைக்குப் பின்பு கைதுசெய்யப்பட்டார். இவர்மீது தேசத்துக்கு எதிராக நடந்து கொண்டது, விரோதத்தைத் தூண்டுவது, குற்றச் சதியில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் டெல்லி போலீஸாரால் சுமத்தப்பட்டுள்ளன.

இரு தினங்களாக திஷா ரவி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கைதுசெய்யப்பட்டிருக்கும் செய்தி, சமூக ஊடகங்களில் விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

திஷா ரவி மீது தேசத்துக்கு விரோதமாக நடந்துகொண்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சுமத்தியிருக்கிறார்கள்.

திஷா ரவியின் கைது குறித்து பல்வேறு ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தும்வருகின்றனர்.

1. யார் இந்த திஷா ரவி?

22 வயது திஷா ரவி காலநிலை மாற்றத்துக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஓர் ஆர்வலர்.

பெங்களூரைச் சேர்ந்த இவர் ஸ்வீடனைச் சேர்ந்த இளம் வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க்கால் நிறுவப்பட்ட `Fridays for future’ என்ற அமைப்பின் அங்கமாக இருக்கிறார்.

மேலும், 2019-ம் ஆண்டு `Fridays for future’ அமைப்பின் இந்தியப் பிரிவைத் தொடங்கி அதற்குத் தலைமை தாங்கிவருகிறார் திஷா.

மரம் நடுவது, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது என இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல பணிகளையும் குழுவாக மேற்கொண்டுவந்திருக்கிறார்.

விலங்குகள் நல ஆர்வலராகவும் இருக்கும் திஷா ஒரு `வீகன்’ ஆவார்.

திஷா ரவி
திஷா ரவி

இவர் கடந்த வருடம் வோக் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், ``பருவநிலை மாற்றம் குறித்து வெள்ளை இனத்தவர்கள் சொல்வதைத்தான் இந்த உலகம் கேட்கிறது. என்னைப் பொறுத்தவரை இது, `சுற்றுச்சூழல் பாகுபாடு.’ பருவநிலை மாற்றம் குறித்து வளரும் நாடுகளில் உள்ள மக்கள் சொல்வதையும், அவர்கள் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

2. மோடிக்கு எதிரான கருத்துகள்

மற்றொரு நேர்காணலில் மோடிக்கு எதிராகக் காத்திரமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், ``மோடி தான் செய்வது அனைத்தும் சரியானவை என அனைவரையும் நம்பவைத்துவிட்டார். அவருடைய நிர்வாகம் குறித்து ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. மனித உரிமை மீறல், சூழலியல் செயல்பாடுகள் என அவர் செயல்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மோடி
மோடி

அதே நேர்காணலில் அவர், தமது பெற்றோரும் அவரை ஆதரிப்பதாகப் பதிவுசெய்திருக்கிறார்.

3. திஷா மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன?

விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட திஷா விசாரணைக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டார். இவர்மீது தேசத்துக்கு எதிராக நடந்துகொண்டது, விரோதத்தைத் தூண்டுவது, குற்றச் சதியில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் டெல்லி போலீஸாரால் சுமத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இவரை ஐந்து நாள் காவல்துறையின் கட்டுப்பாட்டில்வைக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் கிரெட்டா தன்பர்க்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில். அவர் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான `டூல் கிட்` ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது போராட்டத்தில் ஈடுபவர்கள், ஆதரவு தருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நடைமுறைகள்தான் அந்த டூல் கிட்.

கிரெட்டா தன்பர்க்
கிரெட்டா தன்பர்க்

ஆனால், அந்த டூல் கிட் இந்தியாவுக்கு எதிரான சமூக, கலாசார மற்றும் பொருளாதாரரீதியில் போர் புரிவதற்கான திட்டம் என்றும், அதை உருவாக்கியவர் திஷா ரவிதான் என்றும் அதை அவர் கிரெட்டாவுடன் பகிர்ந்திருக்கிறார் எனவும் டெல்லி போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அந்த `டூல் கிட்’ தற்செயலாக வெளியில் கசிந்தவுடன், கிரெட்டாவிடம் அதை நீக்குமாறு திஷா கேட்டிருக்கிறார் என்றும் டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், இவர்கள் காலிஸ்தான் ஆதரவுக்குழுவுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்றும் டெல்லி போலீஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால், விசாரணைக்காக டெல்லி அழைத்து வரப்பட்ட திஷா ரவி, நீதிமன்றத்தில் தான் அந்த டூல் கிட்டில் வெறும் இரு வரிகளை மட்டுமே மாற்றி எழுதியதாகத் தெரிவித்திருக்கிறார்.

சமீபநாள்களாக விவசாயிகளுக்கு ஆதரவாகப் பகிரப்படும் ட்விட்டர் பதிவுகள் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் என்று அந்தப் பதிவுகளையும், கணக்குகளையும் நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திடம் இந்திய அரசு தரப்பில் கோரப்பட்டுவருகிறது. இந்தநிலையில்தான் தற்போது திஷா ரவியின் கைது நடந்தேறியிருக்கிறது.

4. சரி… டூல் கிட் என்றால் என்ன?

போராட்டங்கள் நடத்தும்போது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டிவை என்னென்ன என்பதை விளக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் செயல்திட்டம்தான் 'டூல் கிட்.’ எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், போராட்ட செயல்திட்ட ஆவணம் அது.

பொதுவாக, எந்தவொரு போராட்டத்தின்போதும், 'டூல் கிட்' பகிரப்படுவது வழக்கம்தான்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயற்பாட்டாளரான கிரெட்டா தன்பர்க், தமது ட்விட்டர் பக்கத்தில் 'டூல் கிட்' ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில் இந்தியாவில் களத்திலுள்ள மக்களால் இந்த டூல் கிட் புதுப்பிக்கப்பட்டுவருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன் பிறகு அதை தமது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியிருந்தார்.

5. அதில் என்ன இருந்தது?

போராட்ட செயல் திட்டம்தான் அதிலிருந்தது. குறிப்பாக ட்விட்டரில் டிரெண்ட் செய்வது, பெரு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது என அதிலிருந்தவை போராட்டத் திட்டம் குறித்த ஆவணம்தான்.

திஷா ரவி
திஷா ரவி

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் காணொலிகளை வெளியிடுவது ஆகியவை கிரெட்டா தன்பர்க்கின் 'டூல் கிட்டில்' குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கைவைப்பது, பிப்ரவரி 13, 14 தேதிகளில் அவருக்கு அருகிலிருக்கும் இந்தியத் தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் ஆகியவற்றின் அருகே போராட்டம் நடத்துவது உள்ளிட்டவையும் அந்த டூல் கிட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன.

6. ஆதரவும் எதிர்ப்பும்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா, ராஜதுரோகம் தொடர்பான எந்த ஆவணமும் அந்த டூல் கிட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார்.

பொதுவெளியில் கிடைக்கும் அந்த டூல் கிட்டை நானும் படித்தேன். ஆனால், அதில் வன்முறை குறித்த தகவல்களோ, மக்களைக் கிளரச் செய்யும் எந்த விஷயமோ இல்லை என்று தீபக் குப்தா கூறியிருக்கிறார்.

வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹாவும் திஷா ரவிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர், ``இந்தக் கைது கண்டிக்கத்தக்கது; மிகவும் மோசமான செயல். இந்தியச் சமூகம் எந்த அளவுக்குக் கீழ் நோக்கிச் சென்றிருக்கிறது என்பதைப் பாருங்கள்” எனக் கூறியிருக்கிறார்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் சித்தார்த் எனப் பலர் திஷாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அதேநேரம் தீவிர வலதுசாரிகள் இந்தக் கைதுக்கு நியாயம் கூறிவருகின்றனர்.

``புர்ஹான் வானிக்கு 21 வயது, அஜ்மல் கசாபுக்கு 21 வயது. வயது வெறும் ஓர் எண்தான். யாரும் சட்டத்துக்கு மேல் கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றம் குற்றமே..." என பெங்களூரைச் சேர்ந்த பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர், பி.சி.மோகன் ட்வீட் செய்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு