Published:Updated:

`ஒரே துண்டு, முடிவெட்டும் கருவிகள்!’ - ம.பி சலூனுக்கு ஒரே நாளில் வந்த 6 பேருக்கு #Corona தொற்று

முடி திருத்தம்
முடி திருத்தம்

முடி திருத்தகத்தில் வந்த அனைவருக்கும் ஒரே துண்டையும் முடிவெட்டும் கருவிகளையும் பயன்படுத்தியதே தொற்று பரவக் காரணமாகக் கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் சென்று வரும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு முடி திருத்தகத்தில் முடி வெட்டச் சென்ற 6 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், பார்கோன் கிராமம் உள்ளது. இந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் நபர் தன்னுடைய சொந்த கிராமமான பார்போனுக்குத் திரும்பியுள்ளார். அங்கு ஒரு முடி திருத்தகத்துக்குச் சென்றுள்ளார்.

Stay Home
Stay Home

பின்பு அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் அந்தக் கடைக்குச் சென்ற நாளில் அங்கு வந்த 12 நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அதில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்கோன் மாவட்டத்தில் தலைமை மருத்துவ அதிகாரி திவ்யேஷ் வர்மா கூறுகையில், ``அந்த முடி திருத்தகத்துகுச் சென்ற 12 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 6 பேரின் குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பார்கோன் கிராமமே மூடப்பட்டு உள்ளது’’ என்று கூறினார்.

Representational Image
Representational Image

அந்த முடி திருத்தகத்தில் இருந்த முடி திருத்துனருக்கு தொற்று இல்லை. முடி திருத்தகத்தில் வந்த அனைவருக்கும் ஒரே துண்டையும் முடிவெட்டும் கருவிகளையும் பயன்படுத்தியதே தொற்று பரவியதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்தூர் உணவகத்தில் பணிபுரிந்த நபரின் மூலமே மற்றவர்களுக்கு தொற்று பரவியுள்ளது. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரின் வயது 28 முதல் 73 வரையாகும்.

கார்கோன் மாவட்டத்தில் தற்போது வரை 60 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது .அதில் 6 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 19 பேருக்கு கடந்த இரண்டு நாள்களில் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
`தளர்வுகள் என்னென்ன... எந்தெந்தக் கடைகள் திறக்கலாம்?’ விளக்கம் சொன்ன மத்திய அரசு அதிகாரிகள்

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,942. தொற்றில் இருந்து மீண்டவர்கள் 5,210. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்கள் 779 பேர் என்கிறது அரசின் புள்ளிவிவரம்.

அடுத்த கட்டுரைக்கு