Published:Updated:

3 கி.மீ கியூ; 2 மணி நேர காத்திருப்பு; 25 ரூபாய் வெங்காயம்! -ஆந்திராவை அதிரவைத்த முதியவர் மரணம்

ஆந்திராவில், வெங்காயம் வாங்க வரிசையில் நின்ற முதியவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பையா ரெட்டி
சம்பையா ரெட்டி

நாடு முழுவதும் சாமான்ய மக்களை அச்சுறுத்தும் விஷயங்களில் தற்போது வெங்காயமும் இணைந்துவிட்டது. வெங்காய தோசை சாப்பிட்டால்கூட, ‘நீ அவ்வளவு பெரிய பணக்காரனா...’ எனக் கேட்கும் அளவுக்கு வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இதைவிட, கோழிக்கறிக்கு இணையாக ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுவதாக வெளியாகும் மீம்ஸ்களும் இணையத்தை ஆக்கிரமித்துவருகின்றன.

வெங்காயம்
வெங்காயம்

வெங்காய விலையின் ஏற்றத்தால் சாமான்ய மக்கள் படும் துயரத்தைக் கண்ட ஆந்திர அரசு, ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயத்தை வெறும் 25 ரூபாய்க்கு விற்று வருகிறது. அதுவும் வார நாள்களில் மட்டும் உழவர் சந்தைகளில் இந்த விற்பனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு, இன்று காலை 8:30 மணியளவில் சந்தையில் விற்பனை தொடங்கியுள்ளது.

வெங்காய விலை உயர்வுக்குக் காரணம் என்ன? எப்போது விலை குறையும்?

கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தையிலும் இதேபோன்று விற்பனை நடைபெற்றுள்ளது. அங்கு விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் கூட்டம் நின்றுள்ளது. விற்பனை தொடங்கியதும், சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் காத்திருந்து, வெங்காயம் வாங்கியுள்ளனர்.

ஆந்திரா வெங்காய விற்பனை
ஆந்திரா வெங்காய விற்பனை

சம்பையா ரெட்டி என்ற 60 வயது முதியவரும் வரிசையில் நின்றிருக்கிறார். 2 மணி நேரத்துக்கும் மேல் வெயிலில் நின்றதால், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சம்பையா உயிரிழந்துவிட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டதால் சம்பையா முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், மொத்த ஆந்திராவையும் அதிரவைத்துள்ளது.

இதுபற்றிப் பேசியுள்ள குடிவாடா நகர் காவல் அதிகாரிகள், “இரண்டு நாள் விடுமுறை என்பதால், இன்று வெங்காயம் வாங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. வெங்காயம் வாங்குவதற்கு மக்கள் அலைமோதியதால், சற்று தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. சம்பையா, அந்தக் கூட்ட நெரிசலில் நின்றிருந்ததால் திடீரென மயங்கிவிழுந்து, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது, இயற்கையான மரணம் என்பதால், எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை” என்று கூறியுள்ளனர்.

இதேபோன்று விசாகப்பட்டினத்தில், வெங்காயம் வாங்க காலை ஐந்து மணி முதல் காத்திருந்தும் அவர்களுக்கு வெங்காயம் விநியோகிக்கப்படாததால், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்காய விலை உயர்வைக் கண்டித்து, ஆந்திராவின் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவமும் ஒருபுறம் நிகழ்ந்துள்ளது.