Published:Updated:

`1 கிலோ கோழி ரூ.10 ; உயிருடன் புதைக்கப்பட்ட 6000 கோழிகள்!’ -வியாபாரிகளை உறையவைத்த கொரோனா வதந்தி

புதைக்கப்பட்ட கோழிகள்
புதைக்கப்பட்ட கோழிகள்

கோழிகள் மூலம் கொரோனா பரவுவதாக வெளியான வதந்தி மற்றும் பறவைக் காய்ச்சலால் கோழிகள் விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகர் வுஹானில் இருக்கும் ஓர் இறைச்சி சந்தையிலிருந்து பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், தற்போது 123 நாடுகளுக்குப் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ், சீனாவையும் தாண்டி இத்தாலி, ஐரோப்பா போன்ற பல நாடுகளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,627 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,139 ஆகவும் உள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலக சுகாதார அமைப்பு, இந்தக் கொரோனா வைரஸை தொற்றுநோய் பாதிப்பாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 50-க்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்த வைரஸ் தொற்றினால், பல நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்த மாதம் 15-ம் தேதி வரை இந்தியா வருவதற்கு எவருக்கும் விசா வழங்கப்போவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

`மீண்டு வரும் சீனா... பிடியில் சிக்கிய இத்தாலி' - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் #Corona

இந்நிலையில், இறைச்சியின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாகப் பல நாள்களாக வதந்தி பரவிவருகிறது. இறைச்சியின் மூலம் வைரஸ் பரவுவதில்லை என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தாலும், அதை வாங்க மக்கள் பயப்படுகிறார்கள். இதனால் பல மாநிலங்களில் இறைச்சி விலை கடுமையாகச் சரிவடைந்துள்ளது. இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் பறவைக் காய்ச்சலும் வேகமாகப் பரவிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களினாலும் கோழி இறைச்சி விற்பனை முற்றிலும் நஷ்டமடைந்துள்ளது.

பிராய்லர் கோழி
பிராய்லர் கோழி

தமிழகத்தில் 90 ரூபாய்க்கு விற்ற உயிருள்ள கோழி, தற்போது 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உரித்த கோழி 160 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது. பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய உணவகங்கள் வரை அனைத்து இடங்களிலும் கோழிக்கறி விற்பனை குறைந்துவிட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் அகமது மகந்தர் என்ற பண்ணை வியாபாரி, தான் வளர்த்த 6,000 கறிக்கோழிகளை உயிருடன் புதைத்துள்ளார். கோழிகள் புதைக்கப்படும் வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

முன்னதாக, ஒரு கிலோ கோழி (உயிருடன்) 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்ததாகவும், தற்போது 5 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் நசீர் அகமது வேதனை தெரிவித்துள்ளார். வருமானத்தைத் தாண்டி கோழிகளைப் பராமரிப்பதற்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவாவதால், இந்த இழப்பை சமாளிக்க முடியாமல் நஷ்டத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

அதே கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலும் ஒரு வியாபாரி 9,500 கோழிக்குஞ்சுகளை உயிருடன் புதைத்துள்ளார். கொரோனா வைரஸால் பரவிய வதந்தியினால், தங்கள் வியாபாரம் நஷ்டமடைந்துள்ளதையே அவரும் காரணமாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு