குதிரை காலை நான் உடைத்தேனா? அங்கு நான் இல்லவே இல்லை என மறுக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் குதிரையின் காலை அடித்து உடைத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி, அந்த சம்பவத்தின்போது நான் அங்கு இல்லவே இல்லை. அப்படி என் மீது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், என்னுடைய காலை இழக்க தயார் என்று கூறி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சக்திமான் என்ற போலீஸ் குதிரையின் கால் உடைந்தது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கம்பால் தாக்கியதில் குதிரையின் கால் உடைந்ததாக வீடியோ காட்சிகள் வெளியானது. அந்த வீடியோவில் குதிரையை கணேஷ் ஜோஷி கம்பால் கடுமையாக தாக்கும் காட்சிகள் இருந்தது.

இதை தொடர்ந்து, குதிரையை தாக்கியதாக கணேஷ் ஜோஷி எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் நேற்று அந்த மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் கோஷங்கள் எழுப்பியதால், சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
 
குதிரையை கணேஷ் ஜோஷி கம்பால் அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதனை அப்பட்டமாக அவர் மறுத்து உள்ளார். ''சம்பவம் நடந்தபோது நான் அங்கு இல்லவே இல்லை. தடுப்புக் கட்டைக்குள் குதிரையின் கால்கள் சிக்கிக் கொண்டது. குதிரையை காப்பாற்றுவதற்காகத்தான் கம்பைக் கொண்டு முயற்சித்தேன்'' என்று அவர் கூறி உள்ளார்.

மேலும், ”எனக்கு எதிராக சதி நடக்கிறது. அந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கு எங்கேயும் இல்லை. குதிரையை பார்க்க நேற்று சென்றேன். குதிரையின் நிலையை கண்டு நான் பெரிதும் கவலை அடைந்தேன், குதிரையின் சிகிச்சைக்கான செலவை நான் அளிப்பேன். நான் தெரு விலங்குகள் மீதுகூட அன்பு செலுத்துபவன். அதனால், இதனையாரும் நம்ப மாட்டார்கள். இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். இதில் என் மீது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், என்னுடைய காலை இழக்க நான் தயார்" என்று முழுமையாக மறுத்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் ஐ.ஜி. கார்வால் ராங்கே கூறுகையில், ''வீடியோவை எல்லோரும் பார்த்து இருக்க முடியும், என்ன நடந்தது என்பதை நிரூபிக்க நாங்கள் சாட்சியங்களும் வைத்து உள்ளோம். கணேஷ் ஜோஷிக்கு எதிராக நாங்கள் வழக்குப்பதிவு செய்து உள்ளோம். குதிரை அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. குதிரையின் காலை காப்பாற்றும் முயற்சியாக அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு கால்நடை மருத்துவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!