Published:Updated:

`நாட்டை சிறுமைப்படுத்தும் முயற்சி!' - 49 பேரின் கடிதத்துக்கு 62 பிரபலங்கள் பதில்

கும்பல் வன்முறைகளைத் தடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு 49 பிரபலங்கள் கடிதம் எழுதிய நிலையில், அதற்கு 62 பிரபலங்கள் தற்போது பதில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

கங்கனா ரணாவத், பிரசூன் ஜோஷி
கங்கனா ரணாவத், பிரசூன் ஜோஷி

கும்பல் வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வருவதாகவும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதில், பிரபல இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காய்ஷாப், கௌதம் கோஷ், நடிகை ரேவதி, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அந்தக் கடிதத்தில், ``நமது நாட்டில் சமீபகாலமாக நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்கள் அமைதியை விரும்பும் எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அனுராக் காஷ்யப், மணிரத்னம்
அனுராக் காஷ்யப், மணிரத்னம்

இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு மட்டும் சிறுபான்மையினர் மீது 840 தாக்குதல் நடந்தது என்ற தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) அளித்திருக்கும் அறிக்கை எங்கள் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 'ஜெய் ஶ்ரீராம்' என்ற பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தக்கூடிய வார்த்தை தற்போது போர் முழக்கமாக மாற்றப்பட்டு, அதைச் சொல்லச் சொல்லியே பல்வேறு மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடைபெறும் செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், அந்தக் கடிதத்துக்குப் பதிலளிக்கும் விதமாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத், பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, சினிமா தயாரிப்பாளர் விவேக் அக்னிகோத்தாரி, பல்லவி ஜோஷி, திரைபிரபலம் மதூர் பண்டார்கர், பாரம்பர்ய நடனக் கலைஞரும் எம்பியுமான சோனால் மான்சிங் என 62 பிரபலங்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அந்தப் பதில் கடிதத்தில்,``பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டதாகக் கடந்த 23-ம் தேதி வெளியான திறந்த மடல் எங்களைக் காயப்படுத்தியது. 49 பேர் கையெழுத்திட்டிருந்த அந்தக் கடிதம், ஒருசாரரின் கவலையை வெளிப்படுத்துவதாகவும் அரசியல் ஒருசார்புத் தன்மை கொண்டதாகவும் இருந்தது. நம் நாட்டின் ஜனநாயக மதிப்புகளையும் நமது ஒற்றுமையையும் குலைக்கும் விதமாக தவறான நோக்கத்துடன் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் நமது நாட்டின் நிலையையும் பிரதமர் மோடி அரசையும் எதிர்மறையாக சித்திரிக்கும்.

பழங்குடியின மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டபோது இவர்கள் எங்கிருந்தார்கள்? காஷ்மீரில் பள்ளிகள் எரிக்கப்பட்டபோது அவர்கள் வாய்திறக்கவில்லையே? நாட்டின் சில பல்கலைக்கழக வளாகங்களில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து அவர்கள் பேசவில்லையே? பெண்களுக்கு எதிரான முத்தலாக் நடைமுறையை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாக பின்னால் நிற்க அந்தக் கடிதத்தை எழுதியவர்களுக்கு தைரியமில்லை. நாட்டின் பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
`கண்டித்தால் மட்டும் போதாது பிரதமர் அவர்களே' - கும்பல் வன்முறைக்கு எதிராகத் திரண்ட 49 பிரபலங்கள்!

அதேபோல், ராமர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீதும் அவர்கள் ஏளனத்தை விதைக்கின்றனர். அவர்கள் குறிப்பிட்ட ஒரு கொள்கையையே உயர்த்திப்பிடிக்கிறார்கள். இது இந்தியாவை சிறுமைப்படுத்தும் முயற்சி. அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், முந்தைய கடிதம் எழுதியவர்களால் கண்டுகொள்ளப்படாத விஷயங்கள் என்று கூறி 12 விவகாரங்களை இவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதில், பெரும்பாலானவை மேற்குவங்க மாநிலம் தொடர்புடையவையே.