விஜய் மல்லையா இப்போது இங்கிலாந்து குடிமகனா..? - கிங் ஆஃப் கிரேட் எஸ்கேப்

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்று விட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன.

அதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது, கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவின் பாஸ்போட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு, அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு தற்போது முடக்கியுள்ளது.

அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பதுக்கப்பட்டிருந்த பணத்தில் இருந்து அங்கே அவர் சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்று, அந்நாட்டு குடிமகனாகவே மாறிவிட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு வாக்காளர் பட்டியிலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாஸ்போர்ட் முடக்கப்பட்ட குற்றவாளிக்கு, இங்கிலாந்து அரசு எப்படி குடியுரிமை கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள், குடியுரிமை அனுமதியோடு இங்கிலாந்தில் தங்கினால், அவருக்கு அங்கு வாக்குரிமை அளிக்கப்படுவதுண்டு. அதன் அடிப்படையிலேயே மல்லையா வாக்குரிமை பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-சௌமியா உதயகுமார்
(மாணவர் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!