'அரசின் இலவச மோர் திட்டத்துக்கு என் உறவினரிடம்தான் தயிர் வாங்கணும்!'- முதல்வரின் அடடே உத்தரவு

நகரி:  அரசின் இலவச மோர் வழங்கும் திட்டத்துக்கு தனது குடும்ப உறவினரின் நிறுவனத்தில்தான் தயிர் வாங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளது அம்மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தமிழகம், ஆந்திரா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இலவச நீர், மோர் வழங்க அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இதேபோல் ஆந்திராவிலும் இலவச நீர், மோர் வழங்க அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்துக்காக ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மோர் வழங்கும் திட்டத்திற்கு 'ஹெரிட்டேஜ்' பால் நிறுவனத்திடம் இருந்துதான் தயிர் வாங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுற்றறிக்கை மூலம் உத்தரவு அனுப்பியுள்ளார். இந்த ஹெரிட்டேஜ் நிறுவனம்,  சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறவினருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.

சந்திரபாபு நாயுடுவின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பா.ஜ.க.வின் மாநில செயலாளர் சுரேஷ் ரெட்டி கூறுகையில், ''மோர் வழங்கும் திட்டம் ஏழைகளுக்கானதா? தனது குடும்ப நிறுவன வளர்ச்சிக்கான திட்டமா? என்று புரியவில்லை. ஹெரிட்டேஜ் நிறுவனம் இல்லாமல் மற்ற நிறுவனங்களில் தயிர் வாங்கினால், அது ஏழைகளுக்கு ஆகாதா?'' என்று கேள்வி எழுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!