பிரட், பீட்சா, பர்கர்... இவற்றிலும் நச்சு ரசாயனம்! அதிர்ச்சி ஆய்வு

 

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பி சாப்பிடும்  உணவுப்பொருளில் பிரட், பீட்சா, பர்கரும் அடங்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இத்தகையை உணவுப்பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உணவுப்பொருட்களில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் நச்சு ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது எனவும், இந்த நச்சு ரசாயனத்தை உட்கொள்வதால், தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் சுற்றுச்சூழல் மைய ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் ஐந்து பன்னாட்டு உணவகங்களான கேஎஃப்சி, டோமினோஸ், பீட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தவிர பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் நிறுவன பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில்  கேஎஃப்சி உள்ளிட்ட உணவகங்களில் இருந்தும், கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரட்களில் இருந்தும் மொத்தம் 38 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 84 சதவீத பிரட்களில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருள்கள் கலந்துள்ளன. இவை இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இந்த வேதிப்பொருள்கள் கலந்த பிரட்கள் தாராளமாக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சாண்ட்விச் பிரட், வொயிட் பிரட், பாவ், பன் ஆகியவற்றில் அதிக அளவில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் வெளியானதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனினும், அகில இந்திய பிரட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, உரிய பாதுகாப்பு தரத்துடன்தான் இந்தியாவில் பிரட்கள் தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நூடுல்ஸில் ரசாயன வேதிப்பொருள் இருப்பதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆய்வுக்கு பின்னர் தற்போது நூடுல்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!