தமிழகத்தின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே புதிய அணை சாத்தியமாகும்! -பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் திட்டத்தில் மாற்றம் இல்லை. ஆனால், தமிழக அரசு ஒத்துழைத்தால் மட்டுமே புதிய அணை கட்ட முடியும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் உள்ள முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி, அதற்கு பதிலாக புதிய அணை கட்டப்போவதாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கூறி வந்தது. சமீபத்திய தேர்தலில், இடதுசாரி கூட்டணி ஆட்சியை கைப்பற்றி புதிய முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பு ஏற்றுள்ளார். அவர், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். இதனால், அவருக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அவர் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றி கொண்டார்.

இந்நிலையில், கேரளாவின் புதிய அமைச்சரவைக்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசும்போது, ''முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நமது அரசுக்கு அதில் உடன்பாடு இல்லை. அணை பலமாக இல்லை என்பதை நாம் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கு சர்வதேச நிபுணர்கள் குழு, அணையின் பலத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு கேரள அரசு தனது திட்டத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கும்.

மேலும், முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் விஷயத்தில் இந்த அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கோரிக்கையில் இருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. நானோ அல்லது எனது அரசோ புதிய அணை தேவையில்லை என்ற கருத்து கொண்டவர்கள் அல்ல. அதில் எந்த சர்ச்சையும் கிடையாது. புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. எனது அரசின் கருத்தும் அதுதான்.

ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும். இந்த பிரச்னையில், தமிழகத்துடன் மோதலில் ஈடுபடுவது பிரச்னைக்கு தீர்வு ஆகாது. பேச்சுவார்த்தை மூலமே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். தமிழகத்துடன் எந்தவித பதற்றமும் உருவாக நாங்கள் விரும்பவில்லை. நல்லுறவை பராமரிக்கவே விரும்புகிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!