Published:Updated:

`பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காவிட்டால் வேலை நிறுத்தம்!' -கெடு விதித்த மும்பை துப்புரவுப் பணியாளர்கள்

துப்புரவுப் பணியாளர்கள்
துப்புரவுப் பணியாளர்கள்

48 மணி நேரத்திற்குள் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக  எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மக்களும் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் பல நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மும்பை நகரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் (Safaiwala) தங்களுக்கு சானிடைசர்கள் மற்றும் முகமூடி, காலணிகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்டப் பாதுகாப்புக் கருவிகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

மும்பையில் கச்சாரா வஹ்துக் ஷ்ராமிக் சங்கம் (kachara vahatuk shramik sangh), பி.எம்.சி ( Brihan mumbai Municipal Corporation) கமிஷனர் பர்தேஷிக்கு 6,500 ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா
கொரோனா
pixabay

48 மணி நேரத்திற்குள் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர். சங்கத்தின் பொதுச்செயலாளர் மிலிந்த் ரனாடே அறிவிப்பில், “திடக்கழிவு மேலாண்மைத் துறையில் சுமார் 6,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். COVID-19 தொற்றுநோய் இருந்தபோதிலும், இந்தத் தொழிலாளர்களுக்கு முறையான முகமூடிகள், கையுறைகள், சீருடை, காலணிகள் மற்றும் சோப்பு அல்லது சுத்திகரிப்பான் வழங்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் போதுமான அளவு பாதுகாக்கப்படாவிட்டால் அவர்களால் தங்கள் வேலையைச் செய்யமுடியாது" என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணியாளர் தாதராவ், “எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. இந்த அசாதாரண சூழலிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. வழக்கமான மருத்துவப் பரிசோதனையை நாங்கள் கோருகிறோம்” என்றார்.

கழிவுநீர் செயல்பாட்டின் தலைமைப் பொறியாளர் அசோக் யம்கர் தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தி இருக்கிறார். அதில் அவர் பிரச்னைகளை ஆராய்வதாக உறுதியளித்தார். பாதுகாப்பு ஒப்பந்தங்களை வழங்குமாறு வார்டு அதிகாரிகள் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா
கொரோனா

தாராவியில் பணிபுரியும் ஷங்கர் குஞ்சிகோர்வே, ``ஒவ்வொரு வாகனத்திலும் ஆறு தொழிலாளர்கள் கழிவுகளை எடுத்துச் செல்கின்றனர். உலோகக் கூடை போன்ற உபகரணங்கள் களத்தில் இரண்டு நபர்களால் பகிரப்படுகின்றன. தொழிலாளர்கள் கடுமையான ஆபத்தில் உள்ளனர். எங்கள் கோரிக்கைகள் குறித்து பி.எம்.சி சிந்திக்க வேண்டும்” என்றார் குஞ்சிகோர்வே.

அடுத்த கட்டுரைக்கு