பெற்றக் குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்ட தம்பதி...மனதை உருக்கும் சம்பவம்!

சித்துார்: கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து குழந்தையை காக்க போதிய பணம் இல்லாததால், தங்கள் குழந்தையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி இளம்தம்பதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சம்பவம், ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரமணப்பா - சரஸ்வதி தம்பதி. இவர்களது பெண் குழந்தைக்கு, பிறந்தது முதல் 'பிலியரி அட்ராசியா' எனும் கல்லீரல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது.

மருத்துவர்கள், உடனடியாக குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து,  பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த அறுவைசிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் செலவானது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரமணப்பா தம்பதி, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன்பெற்று, இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர்.

ஆனால் குழந்தைக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதால், கடந்த மே மாதம் குழந்தையை மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாகத் தெரிவித்ததால், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், 2 வாரத்துக்குள் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று அதிர்ச்சி தந்தனர்.

இந்த அறுவைச் சிகிச்சைக்கு கிட்டத்தட்ட  20 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என  மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள ஒரு அங்காடியில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வரும் ரமணப்பா, இவ்வளவு பெரிய தொகையை செலவிடும் நிலையில் இல்லை. குழந்தை உயிருக்குப் போராடித் துடிப்பதைக் காண முடியாமல், அதன் பெற்றோர்  மாவட்ட நீதிமன்றத்தில் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு மனுத் தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் ஆந்திர அரசுக்கு நோட்டீசு அனுப்பியது. இதுகுறித்து அறிந்த, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அக்குழந்தையின் அறுவைச் சிகிச்சை மற்றும் மருந்துச் செலவுகளை ஏற்று, ஆந்திர அரசு சார்பில் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ரமணப்பா தம்பதியினர் தங்கள் குழந்தை காப்பாற்றப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!