வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (28/06/2016)

கடைசி தொடர்பு:13:47 (28/06/2016)

பேரறிவாளனுக்கு அதிர்ச்சி கொடுத்த எரவாடா சிறை! -மறைக்கப்படுகிறதா சஞ்சய் தத் விடுதலை?

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பிய, ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளனுக்கு அதிர்ச்சி பதிலை அளித்துள்ளது மும்பை எரவாடா சிறை நிர்வாகம். ' இனி மகாராஷ்ட்ரா மாநில தகவல் ஆணையத்தில் முறையிட இருக்கிறோம்' என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது வீட்டில் இருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மும்பை தடா நீதிமன்றம், சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனைக் காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைத்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் எரவாடா சிறையில்,  2013-ம் ஆண்டு மே மாதம் அடைக்கப்பட்டார். சிறைக்குள் இருந்து அடிக்கடி அவர் பரோலில் வெளியில் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் சஞ்சய் தத். சிறை அதிகாரி தன்னுடைய அதிகாரத்தின்கீழ் விடுவிப்பதாக அறிவித்திருந்தார்.

இதைப் பற்றி செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்ட பேரறிவாளன், எரவாடா சிறை நிர்வாகத்திற்கு சில கேள்விகளை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பியிருந்தார். ' உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2015 டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ' குற்றவியல் பிரிவு 435(1) கீழ் வரும் எந்த வழக்கிலும் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முடியாது' எனக் கூறியுள்ளது. அந்தத் தீர்ப்பில், ' பிரிவு 432(7)(A) பிரிவின் கீழ் வரும் அனைத்து வழக்குகளிலும் தண்டனைக் குறைப்பு வழங்க மத்திய அரசால் மட்டுமே முடியும்' என வரையறை செய்துள்ளது.

இதில், மத்திய அரசைக் கலந்தாலோசித்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டாரா? என்பது மிக முக்கியமான கேள்வியாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ' சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, சான்றளிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும்; எந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது; இதுதொடர்பாக, மாநில அரசு மற்றும் சிறை நிர்வாகம் போன்றவை மத்திய அரசைக் கலந்து ஆலோசித்ததா?; அப்படி ஆலோசனை நடத்தியிருந்தால் அது தொடர்பாக சான்றிளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும்' என கேள்விகளை வரிசைப்படுத்தி அனுப்பியிருந்தார்.

 

இதற்கு எரவாடா சிறை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, கடந்த மே 4-ம் தேதி மேல்முறையீடு செய்தார். ' வருகிற 28-ம் தேதி உங்கள் சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுமாறு' பதில் அனுப்பியது சிறை நிர்வாகம். இன்று காலை 11 மணிக்கு எரவாடா சிறைக்குச் சென்றார் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் நிலேஷ்.

அவரிடம் பேசிய சிறை அதிகாரிகள், " பேரறிவாளன் தன்னுடைய கோரிக்கையில் ஒரே ஒருவரின் விடுதலையைப் பற்றிக் கேட்கிறார். அதனால் உங்களுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இல்லை. இதைப் பற்றி மனுதாரருக்கு நாங்கள் கடிதம் மூலம் தெரியப்படுத்துகிறோம்" எனச் சொல்லி, திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

சிறை நிர்வாகத்தின் பதிலை வழக்கறிஞர் எதிர்பார்க்கவில்லை. இதுபற்றி நம்மிடம் பேசிய அவர், " இப்படியொரு பதிலை அவர்கள் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சிறை நிர்வாகம் வேண்டுமென்றே அலைக்கழிக்கிறது. இதுபற்றி மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தகவல் ஆணையத்தில் முறையீடு செய்ய இருக்கிறோம். சஞ்சய் தத் விடுதலை தொடர்பான ஆவணங்களைப் பார்க்கும் வரையில் நாங்கள் ஓயப் போவதில்லை" என்றார்.

'ஒருவர் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்' என்று கேள்வி கேட்பதையே ஜனநாயக விரோதமாகப் பார்க்கும் அதிகாரிகளை எந்த வகையில் நாம் சேர்ப்பது? .

-ஆ.விஜயானந்த் 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்