வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (13/07/2016)

கடைசி தொடர்பு:13:18 (13/07/2016)

அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

அருணாசல பிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில், காங்கிரசுக்கு 42 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். மாநில முதல்வர் நபம் துகியின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர், கடந்த டிசம்பர் மாதம் தனி அணியாக செயல்படத்  தொடங்கினர். இவர்கள், பா.ஜ.க.வின் 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சைகளுடன் இணைந்து கொண்டனர்.

மேலும், சபாநாயகர் நபம் ரெபியா மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தனர். இதை சபாநாயகர் ஏற்காததால், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி,  பா.ஜ.க. மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் நபம் துகியை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். அவருக்குப் பதிலாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கலிகோ பால் என்பவரை முதல்வராகவும் தேர்ந்தெடுத்தனர்.

இது சட்ட விரோதமான நடவடிக்கை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று முதல்வர் நபம் துகியும், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அறிவித்தனர். ஆனாலும், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு நபம் துகிக்கு இல்லாததால் அவர் பதவி விலகும்படி கவர்னர் ஜோதி பிரசாத் உத்தரவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. மேலும், மாநில அரசின் அனுமதியின்றி சட்டசபை கூட்டத் தொடரை கூட்டுவதற்கு கவர்னர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே கவர்னர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில்,  ஜனவரி 25-ம் தேதி காலை டெல்லியில் மத்திய அமைச்சரவை கூடி அருணாசல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை முடிவுக்குக்  கொண்டுவர, அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்வது என முடிவு செய்தது. அதன்படி அன்று மாலையே அருணாச்சல பிரதேசத்தில் கவர்னர் ஆட்சிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

இதற்கிடையே, மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை கடந்த 27-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்  என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான அவசியம் என்ன  என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து அங்கு புதிய அரசு அமைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்சிடம் மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய பெஞ்ச், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை ரத்து செய்ய கவர்னர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது, நபம் துகியின் அமைச்சரவையைக் கலைத்தது செல்லாது, கவர்னரின் உத்தரவு எதுவும் செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதுடன், மத்திய அரசின் நடவடிக்கைக்கும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை ரத்து செய்ய கவர்னர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கூறி இருப்பதால், ஜனாதிபதி ஆட்சி விவகாரத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளது.

இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள நபம் துகி, ''உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த தீர்ப்பால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஆரோக்கியமான ஜனநாயகத்தை பாதுகாக்க வழி வகுக்கிறது. பா.ஜ.க. தலைவர்கள், மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சட்டவிரோதமாக நீக்க முயற்சித்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, நீதியை மீட்டுவிட்டது" என்று கூறி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்