சபரிமலையில் பெண்களை அனுமதிக்க அரசு எதிர்க்கவில்லை! - கேரள அமைச்சர்

டெல்லி: சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை அரசு எதிர்க்கவில்லை என்று கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார்.

கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலின் ஆச்சாரப்படி இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் தடையை விலக்க வேண்டும் என்றும், பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. மேலும் கடவுள், ஆண்-பெண் என பாகுபாடு பார்க்காதபோது, மனிதர்களால் உருவாக்கப்பட்ட தடை வியப்பை அளிக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக கேரள அரசு, நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது.

கேரள மாநில முதல்வராக புதிதாக பதவி ஏற்றுள்ள பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு, சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியானது.

இந்நிலையில் கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், ''சபரிமலை கோயில் தொடர்பான வழக்கில், அந்த கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் இடதுசாரி கூட்டணி அரசு கடந்த 2007 ஆம் ஆண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டது. ஒரு கோயிலில் நுழைவது என்பது மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம் தொடர்பான வி‌ஷயமாகும். இது தொடர்பாக மக்கள் சமூகத்துடன் விவாதிக்க வேண்டும்" என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!