கல்விக்கடன் வசூலில் வங்கிகள் கனிவான அணுகுமுறை! - அருண் ஜெட்லி!

புதுடெல்லி: வாராக் கடன்களை விரைந்து மீட்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதே நேரத்தில், கல்விக் கடனை திரும்ப வசூலிப்பதில் வங்கிகள் கனிவான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். வங்கிகள் கொடுத்த கடனில், தற்போதைய நிலையில் ரூ.8 லட்சம் கோடி வாராக் கடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. வாராக் கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்ந்த 70 ஆயிரம் வழக்குகள், கடன் மீட்புத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இத்தகைய வாராக் கடன்களை விரைந்து மீட்பதற்கான மசோதா, கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது, ஏற்கெனவே உள்ள கடன் மீட்பு தீர்ப்பாய சட்டம் உள்ளிட்ட 4 சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதா ஆகும். நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதா, நேற்று நாடாளுமன்றத்தில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசும்போது, ''வங்கிகள் கொடுக்கும் கடன்கள், பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்றன. ஆனால், அந்த கடன்களை திரும்பச் செலுத்தாவிட்டால், அவை வாராக் கடன்களாகி விடுகின்றன.

கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதற்கான நடைமுறையை இம்மசோதா எளிமைப்படுத்துகிறது. இதன்மூலம், கடன் மீட்புத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து தீர்க்கப்படும்.

கல்விக் கடன் குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். கல்விக் கடன் பெற்றவருக்கு வேலை கிடைக்கும் வரை, அவர் விஷயத்தில், வங்கிகள் கனிவான அணுகுமுறையை மேற்கொள்ளும். ஆனால், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது. கடன் தள்ளுபடி என்பது, வங்கிகள் மேற்கொண்டு கடன் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.

அதே சமயத்தில், விவசாயக் கடன்களுக்கு, இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நலியும்போதுதான், வாராக் கடன்கள் உருவாகின்றன. கடன் பிரச்னையில் உள்ள நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி, வேலை வாய்ப்பை வழங்குவது அவசியம். அதற்காக, ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்றார்.

முன்னதாக, பாரத் ஸ்டேட் வங்கியின் மூலம் கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் இருந்து, கடன் தொகையை வசூலிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

'கல்விக் கடன் தொகையைக் கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் மிரட்டல் விடுப்பதாக' மாணவர்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன. கடன் தொகையை ஒரே தவணையில் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததால், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் லெனின் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!