பா.ஜ.கவை பதற வைத்த பாண்டிச்சேரி பல்கலை! - வைரலான 'வைடர்ஸ்டேண்ட்' புத்தகம் | New Controversy: Shall modi compared with hitler?

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (03/08/2016)

கடைசி தொடர்பு:16:03 (03/08/2016)

பா.ஜ.கவை பதற வைத்த பாண்டிச்சேரி பல்கலை! - வைரலான 'வைடர்ஸ்டேண்ட்' புத்தகம்

பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட புத்தகம் ஒன்று, பா.ஜ.க நிர்வாகிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ' புத்தகத்தைப் படிக்காமலேயே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். கட்டுரை எழுதிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் போராட்டத்தில் இறங்குவோம்' எனக் கொதிக்கின்றன மாணவர் அமைப்புகள்.

'வைடர்ஸ்டேண்ட்' என்ற தலைப்பில் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். அஞ்சலி கங்கா என்ற மாணவரை ஆசிரியராகக் கொண்டு புத்தகம் வெளிவந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த மாணவர் போராட்டங்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா மரணம், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்கள், அலிகார் பல்கலைக்கழக போராட்டம், ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் நடந்த மாணவர் மரணங்கள் என 114 பக்கங்களில் புத்தகத்தை எழுதியுள்ளனர். பல்கலைக்கழகத்தின் 64 மாணவர்கள் கவிதை, கதை, கட்டுரை, கார்ட்டூன் என நேர்த்தியாக கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், ' மோடியை விமர்சித்து எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும். கட்டுரை எழுதிய மாணவர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என கடந்த திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது பா.ஜ.கவும் ஏ.பி.வி.பி அமைப்பும்.

 

இதையடுத்து, பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அறையை பூட்டி சீல் வைத்துவிட்டது நிர்வாகம். அந்த அறையில்தான் வைடர்ஸ்டேண்ட் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய துணைவேந்தர் அனிஷா, ' சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதை முன்பே அறிந்து, அவற்றை நீக்கியிருக்க வேண்டும்' எனப் பேசினார். புத்தகம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது.

நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன், " ஃபேஸ்புக், ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்தாலே நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். புத்தகமாக வெளியிடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அந்தப் புத்தகத்தில் தேச விரோதக் கருத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. சம்பந்தப்பட்ட மாணவர்களை நீக்கும் வரையில் போராடுவோம்"  எனக் கொந்தளித்தார்.

பா.ஜ.க தலைவரின் பேட்டியைக் கண்ட சி.பி.எம் கட்சி, " கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க அரசு கடைபிடித்து வரும் கல்விக் கொள்கையை விமர்சித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் உண்மையா என்பதைக்கூட ஆராயாமல், ஆர்ப்பாட்டம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. புத்தகத்திற்குத் தடை விதித்தாலோ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ போராட்டத்தில் இறங்குவோம்" என அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து புதுச்சேரி பிரதேச இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்திடம் பேசினோம்.

" கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் மாணவர் பங்களிப்புடன் புத்தகம் வெளியிடப்படவில்லை. இந்தப் புத்தகத்தில் கல்விக் கூடங்களில் நடந்தேறிய அவலங்களை வகைப்படுத்தியிருக்கிறோம். இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வைடர்ஸ்டேண்டு என்பது 'எதிர்ப்பு' என்பதைக் குறிக்கும் ஒரு சொல். ஹிட்லருக்கு எதிராக இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்ட்டுகளால் ஜெர்மனியில் நடத்தப்பட்டு வந்த பத்திரிகை. 1926 முதல் 1935-ம் ஆண்டு வரையில் இந்தப் பத்திரிகை செயல்பட்டு வந்தது. பின்னர் நாஜி அரசால் தடை செய்யப்பட்டது. இந்த தலைப்புதான் பிரச்னையா என்பது தெரியவில்லை. புத்தகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்ட பிறகு, ஆன்லைனில் வைடர்ஸ்டேண்டை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஜனநாயகரீதியாக எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்" என்றார் நிதானமாக.

-ஆ.விஜயானந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்