Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தப்பவில்லை... சப் கலெக்டரை அதிர வைத்த வாட்ஸ் அப் வதந்தி!

நேற்று முன்தினம் வாட்ஸ் அப்பில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. அந்த புகைப்படத்தில், ஏதோ ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மூன்று பெண்கள் அமர்ந்துள்ளனர். அந்த மூன்று பெண்களில் ஒரு பெண் அமர்ந்திருக்கும் பெட்டின்  மேல், தனது ஷூ அணிந்த காலை  தூக்கி வைத்து ஏளனப் பார்வையுடன் நலம் விசாரிக்கிறார் ஒரு ஆண்.  பார்த்தவுடன் கோபம் கொள்ள வைக்கும் அந்த புகைப்படத்தில், நோயாளியை நலம் விசாரிப்பது ஒரு  ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், அவர் கிருஷ்ணகிரி சப் கலெக்டர் செந்தில்ராஜ் எனவும், அரசு இவரை தண்டிக்கும் வரை  இணையத்தில் வலம் வர செய்யுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது ( படத்தை பார்க்கவும்).

ஓசூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில்,  இப்படியான ஒரு புகைப்படம் வெளி வந்தது, கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், படத்தில் இருப்பவருடைய முகமும் ஓசூர் சப் கலெக்டர் செந்தில்ராஜ் முகமும் ஒன்று போல் இருந்ததே அதற்குக் காரணம். நொடிப்பொழுதில், அந்த புகைப்படம் ஆயிரக்கணக்கான குரூப்களுக்கு ஷேர் செய்யப்பட்டு விட்டது. விவரம் தெரியாதவர்கள், வாட்ஸ் அப்பில் சப் கலெக்டர் செந்தில்ராஜை திட்டவும் செய்தார்கள்.

ஆனால், உண்மையில் அந்த படத்தில் இருப்பது சப் கலெக்டர் செந்தில்ராஜ் கிடையாது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர். ஜெகதீஸ். அந்தச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்து, அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். யாரோ விஷமிகள் அந்த படத்தை இப்போது எடிட் செய்து, சப் கலெக்டர் செந்தில்ராஜ் என பரப்பியிருக்கிறார்கள். அதிலும், ஓசூர் சப் கலெக்டர் என்பதற்கு பதிலாக கிருஷ்ணகிரி சப் கலெக்டர் என்று தப்பாக வேறு எழுதி பரப்பியிருக்கிறார்கள்.

 

டாக்டர். செந்தில்ராஜ் ஓசூருக்கு வந்ததிலிருந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவே மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக, " ஓசூரை தூய்மையாக வைத்திருப்பதற்கு, வாட்ஸ் அப் குரூப் அமைத்து இளைஞர்களை இணைத்து செயல்பட வைத்தார்  ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு அதிக அளவில் மணல் கடத்தப்பட்டு வந்தது. அதைத் தடுப்பதற்காக, மணல் ஏற்றிச்செல்லும் ஒவ்வொரு லாரி டிரைவரும், மணல் கொண்டு செல்லப்படும் இடம், அந்த இடத்தில் கட்டடம் கட்டப்படுவதற்கான அப்ரூவல் சர்டிஃபிகேட், உரிமையாளரின் புகைப்படம் அனைத்தும் வைத்திருக்க வேண்டுமென கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து,  மணல் திருட்டை ஒடுக்க முனைந்துள்ளார். ஏதாவது ஒரு பிரச்னை என கேள்விப்பட்டால் மீடியாவிற்கு முன்பு அந்த இடத்திற்கு செல்லும் துடிப்பான அதிகாரி. அவரைப் பற்றி ஏன் இப்படியான வதந்தி... யார் இதை செய்தார்கள் ..?" என்று மக்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சப் கலெக்டர் செந்தில்ராஜிடம் பேசினோம்.  “ நேற்று முழுக்க எனக்கு அத்தனை ஃபோன் கால் சார். யார் பண்ணதுன்னு தெரியலை.  வெள்ள நிவாரணப் பணி ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு. பிஸியா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்.  நான் இதைப் பத்தி கவலைப்படல சார்.  நாம நேர்மையா இருக்கோம், நாம எதுக்கு பயப்படணும்" என்று சொன்னார். 

உங்களை தெரிந்தவர்களுக்கும், அந்த புகைப்படத்தின் படத்தின் உண்மை தெரிந்தவர்களுக்கும் பிரச்னை இல்லை. ஆனால் இது எதுவுமே தெரியாமல், வாட்ஸ் அப்பில் இந்த புகைப்படத்தை பார்த்து, நீங்கள்தான் என நினைத்து பலர் திட்டிக்கொண்டிருக்கலாம். சேலம் வினுப்பிரியாவின் புகைப்படத்தை மார்ஃபிங்க் செய்து சமூகவலைதளத்தில் பரப்பியதால்தானே அவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றைக்கு  ஒரு ஐ.ஏ.எஸ் பற்றியே தவறாக வாட்ஸ் அப்பில் பரப்பும் அளவுக்கு சென்றுவிட்டார்கள்.  ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் யார் வேண்டுமானாலும் யாருடைய வாழ்க்கையையும் சீர்குலைக்க முடியும் என்ற நிலைமைக்கு தீர்வே இல்லையா..? என பல கேள்விகளை அவர் முன் வைத்தோம்.

" நீங்கள் சொல்லும் பிரச்னையின் ஆழம் புரிகிறது. முறைப்படி புகார் கொடுக்க போகிறேன். இதை பரப்பியவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன், காத்திருங்கள்..." என உறுதியளித்தார்.

செல்ஃபோனுக்கு பின்னால்  ஒளிந்து கொண்டு அப்பாவிகளையும், நேர்மையானவர்களையும்  சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

- எம்.புண்ணியமூர்த்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement