Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரோம் சர்மிளா: உலகின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது!

ணிப்பூரில்,  ராணுவத்திற்கு வழங்கப்பட்ட  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) நீக்கக்கோரி, 2000 ஆண்டில் உண்ணவிரதம் இருக்கத் தொடங்கி, 16 ஆண்டுகளை கடந்துவிட்டார் இரோம் சர்மிளா. இந்நிலையில்,  இன்றுடன் ( ஆகஸ்ட் 9 ம் தேதி ) தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்திக்கொண்டு, தனது போராட்ட முறையை அரசியல் வழியில் தொடரப் போவதாக சர்மிளா அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகால  இவரது உண்ணவிரதம் முடிவுக்கு வந்தது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது.

இரோம் சர்மிளாவின் போராட்டம் குறித்து  தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுக்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில்,
‘’ தனி மனிதப் போராட்டம் இதுவரை வென்றதில்லை. ஒரு இயக்கமாக , கொள்கையின் அடிப்படையில் நகரும் போராட்டம்தான் இதுவரை வென்று இருக்கிறது.

நம் நாட்டின் அரசியல் நிலையை கவனிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் அனைத்து மாநில அரசுகளும் இயங்குகின்றன. எல்லா மாநில அரசுகளுமே பொம்மை அரசாகத்தான் இருக்கின்றன. இப்படியான சூழலில், அரசியலில் நுழைந்து அவர் என்ன மாற்றத்தை பெற்றுவிடப் போகிறார்? அவரின் போராட்டத்தை வேறு வழியில் கொண்டு செல்கிறார் என்பது நல்ல விஷயம். ஆனால் அரசாங்கத்தை , சட்டங்களை நம்புவது யதார்த்த நிலை இல்லை. இரோம் சர்மிளா, சசிபெருமாள், சங்கரலிங்கனார்  போன்ற தனிமனித போராட்டங்கள் எல்லாமே பிரச்னையை எல்லா தரப்பிடமும் கொண்டு சேர்த்து, கவனத்தைப் பெற்று விவாதிக்க வைக்கும். தனி மனிதப் போராட்டத்துக்கு அவ்வளவுதான் வலு இருக்கிறது.  யார் தேசியம் வேண்டுமென கேட்கிறார்களோ அவர்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும்தான் அரசாங்கம் பார்க்கிறது. இப்படி இருக்கையில் சர்மிளா, தன் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்?.

இப்படியாக தனிமனித போராட்டம்தான் வலு இழந்து வருகிறதே தவிர மக்கள் போராட்டம் என்றும் வெற்றிபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மணிப்பூர் மக்களே சாட்சி. அவர்களது பல போராட்டங்களை வரலாறு பேசுகிறது. நம் நாட்டில் தனிமனிதர் ஒருவர் போராட்டம் மூலமாகவோ அல்லது அரசியலில் இறங்கியோ தீர்வு பெற முடியாது. ஒரு மக்கள் இயக்கமாக இருந்து போராடினால் மட்டும் தான் வெற்றி முடியும்.” என்கிறார்.

சில மாதங்களுக்கு முன் கடுமையான காவல் சூழலில் இருந்த இரோம் சர்மிளாவை, காவலர்களுக்கு தெரியாமல் சென்று சந்தித்துப் பேசி வந்த ஊடகவியலாளர் இரா.கலைசெல்வன்.

அவர் கூறுகையில், "அவங்களோட இந்த முடிவு ஆச்சர்யமானதோ, அதிர்ச்சியானதோ கிடையாது. அவங்க உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டாங்க என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அவர் அரசியலை தேர்வு செய்து இருப்பதை நினைத்து கவலைகொள்கிறேன்.  பிறரின் கட்டாயத்தால் இந்த முடிவு எடுத்து இருக்கவும் வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. காரணம், அவருடனான எனது ஒரு மணி நேர சந்திப்பில், ஒரு 10 நிமிடம்தான் அரசியல் பேசினாங்க. அவங்க அதிகமா பேசினது தன்னோட தனிப்பட உணர்வுகளைத்தான்.

உலகில் ஆயுதம் மற்றும் அகிம்சை என இரண்டு வகையான போராட்ட  முறைகள் உள்ளன. மணிப்பூரில் ஆயுதம் ஏந்தி போராடும் போராட்டக் குழுவுக்கும் அதனால்  எந்த பயனும் கிடையாது. அதே சமயம் அகிம்சை வழியில் போராடும் சர்மிளாவுக்கும் எந்த பயனும் கிடையாது.

சர்மிளா என்னிடம் அதிகம் பகிர்ந்து கொண்ட விஷயம், ’எனது போராட்டத்தையும் கருத்தையும் எதிர்ப்பவர்களை விட,  எனக்கு ஆதரவாக  நிற்பவர்கள்தான் என்னை அதிகம் காயப்படுத்துகிறார்கள். நான் எனது மக்களுக்காக போராடுகிறேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நான் வாழவேக் கூடாது' னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு' என்று சொன்னதுதான்.

நாம எல்லாரும் சர்மிளாவை ஒரு போராளியாக மட்டுமே பார்க்கிறோம். 16 வருடமாக ஒரு பெண் சாப்பிடாமல் , முடி வெட்டாமல், சமயங்களில் தண்ணீர்  கூட குடிக்காமல் இருக்காங்களே. அவரின் உணர்வுகள் எப்படி இருக்கும் என யாரும் சிந்திப்பது கிடையாது.

ஒரு ஆங்கிலோ இந்தியருடன் கடிதம் மூலமான ஒரு காதல் சர்மிளாவுக்கு இருந்தது உண்டு. அவர் காதலை எதிர்த்து மணிப்பூரில் போராட்டம் நடத்தினார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியனை நீ எப்படி காதலிக்கலாம்? அந்த காதலரை கெளரவக் கொலை செய்துவிடுவதாக எல்லாம் சொன்னார்கள். போராளியின் காதலை அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்.

இந்த 16 வருடங்களில் அதிகமான அரசியல், சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மணிப்பூரில் 16 வருடங்களுக்கு முன் இளைஞர்களிடம் இருந்த பார்வை வேறு. இன்றைக்கு இருக்கும் இளைஞர்களிடம் இருக்கும் பார்வை வேறு. இம்பாலிலேயே சர்மிளாவை தெரியாத நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அஸ்ஸாமில் 50 பேரில் இரண்டு பேருக்குதான்  சர்மிளாவை தெரிகிறது. சர்மிளாவை பற்றி தெரிந்தவர்களும் கூட அவரை எதிர்ப்பவர்களாகவும், அவர் பேச்சை தவிர்ப்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள். மிகவும் சொற்ப மக்கள்தான் சர்மிளாவின் தியாகத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள்" என்றார்.

மேலும் சர்மிளா, ‘எனக்கு தெரியும் எந்த மக்களுக்காக நான் போராடுகிறேனோ அவர்களே என்னை மதிப்பது இல்லை. ஆனாலும் நான் போராடுவேன். இங்கு ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கும், அரசாங்கத்துக்கு தொடர்பு இருக்கு. யாருமே இங்க உண்மையாக போராடவில்லை. அதனால் நான் எப்படி மற்றவர்களுடன் இணைந்து போராட முடியும். ஒரு தனி மனுஷியாக என்னால் எப்படி முடியுமோ அப்படி போராடுகிறேன். வெற்றி கிடைக்கும் வரை போராடுவேன்’ என்று சொன்னதாகவும் கலைசெல்வன் குறிப்பிட்டார்.

கவிஞர் சல்மா, ‘’ சரித்திரத்தில் யாரும் இப்படி போராடியது இல்லை.  உலக முழுக்க சர்மிளாவை கவனித்தாலும், இத்தனை காலம் அரசாங்கம் மாறினாலும், யாரும் சர்மிளாவை பொருட்படுத்தவில்லை என்பது ஒரு துரதிருஷ்டமனா நிலை. இத்தனை ஆண்டுகள் அவரின் போராட்டத்துக்கு பலனில்லாதபோது, தனக்கு அதிகாரம் இருந்தால் அவரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். இந்த இரும்பு மனுஷியிடம் இருக்கும்விடா முயற்சியையும்  போராட்டக் குணத்தையும் அனைத்து பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த தேசிய இனமும் மற்றவர்களை தங்களுடன் சேர்க்க மாட்டார்கள். பர்மாவின் பெண் போராளியான ஆங்சாங் சூகியைப் போல் இரோம் சர்மிளாவும் அரசியல் அதிகாரம் பெற்று, தன் லட்சியங்களை அடைய வாழ்த்துவோம்...!

பெண் வலிமை வெல்லும் !

- கே.அபிநயா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement