வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (10/08/2016)

கடைசி தொடர்பு:11:53 (10/08/2016)

கிராமத்தில் மது விற்பனை : 50 குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம்!

பிகாரில் மதுவுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கைலாஷ்புரி என்ற கிராமத்தில் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பிகாரில், கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் முழு அளவிலான மது விலக்கு அமலில் உள்ளது. இதற்கிடையே நாலந்தா மாவட்டம், கைலாஷ்புரி என்ற கிராமத்தில் தொடர்ந்து மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.எம். தியாகராஜன், அந்த கிராமத்தினருக்கு பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனாலும் கைலாஷ்புரியில் மது விற்பனை, தங்கு தடையில்லாமல் தொடர்ந்தது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.  3 உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான மதுப் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, அக்கிராமத்தில் வசித்து வந்த 50 குடும்பத்தினருக்கு, பிகார் மதுவிலக்குத் தடைச் சட்டத்தின் கீழ்,  தலா ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.எம். தியாகராஜன் கூறுகையில், ''இந்த கிராமத்தினருக்கு பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் மது விற்பனை தொடர்ந்ததால், இத்தகைய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மது விற்பனை செய்த உணவு விடுதிகளில் உள்ள அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாலந்தா மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், தற்போது வரை 1,083 லிட்டர் சாராயமும், 1,527 லிட்டர் மதுவும், 109 லிட்டர் கள்ளும் கைப்பற்றட்டு அழிக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் மது விற்பனை நடப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்'' என்றார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்