Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒலிம்பிக் வீரர்களைக் காக்குமா இந்தியா?' -அதிரும் ஆணையத்தின் அரசியல்

ந்திய விளையாட்டுத் துறையில் நிலவும் குறுக்கீடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ். 'தடகள வீராங்கனை சாந்திக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்தால் மட்டுமே, இந்தியா தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வீரர்கள் மத்தியில் உருவாகும்' என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

'அப்துல்கலாம் ஒலிம்பிக் திறனறிதல் மற்றும் வளர்ச்சி அகாடமி' சார்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் பொன்ராஜ்.

அந்தக் கடிதத்தில், " ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற சாந்திக்கு ஏற்பட்ட அவமானங்களைத் துடைக்கும் வகையில், ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆஃப் இந்தியா செயல்படவில்லை" எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசிய பொன்ராஜ், " தமிழக வீராங்கனை சாந்திக்கு நேர்ந்த அவமானத்தை சரி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் அளவுக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஊக்கப்படுத்துவதைப் போலவே, அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால்,  'இந்தியா நம்மை காக்கும்' என்ற நம்பிக்கையை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. அந்தளவுக்கு அரசாட்சி நிர்வாகம் பலவீனமடைந்து நிற்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற சாந்திக்கு அத்தெலெட்டிக் கூட்டமைப்போ, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமோ, விளையாட்டுத் துறை அமைச்சகமோ துணை நிற்கவில்லை. சாந்தியைப் போலவே பெண்மை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட தென் ஆப்ரிக்க வீராங்கனை செமன்யாவின் பின்னால் நின்று, ' பெண்மை சோதனை தவறானது' எனப் போராடி, இழந்த மெடலைத் திரும்ப வாங்கியது அந்த நாடு. அதைவிட மிகுந்த அவமானத்தைப் பெற்ற சாந்திக்குப் பின்னால் நிற்கவே இந்திய அரசு விரும்பவில்லை.

இன்றுவரையில் சாந்திக்கு நடந்த பெண்மை தன்மைக்கான பரிசோதனை சான்றைக்கூட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாங்கவில்லை. ' அவர் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது' என எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், வெறும் வாய்மொழி உத்தரவிலேயே ஒரு வீராங்கணையைச் செயலிழக்கச் செய்த விளையாட்டு ஆணையமா, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களின் பின்னால் நிற்கும்? கடந்த 2015-ம் ஆண்டு, ஜூலை 27-ம் தேதி, டியூட்டி சந்த் வழக்கில்,  ' இனிமேல் ஆண்மை அல்லது பெண்மை பரிசோதனை முறையே கூடாது' எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம்.  ' பெண்மைதன்மை சோதனைக்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லையென்றால், இந்த விதியையே தள்ளுபடி செய்வோம்' எனக் கூறியிருக்கிறது.

இதை எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல், சாந்தி விவகாரத்தில் சர்வதேச சூழ்ச்சிக்குப் பணிந்து சென்ற இந்திய அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்திற்கு அப்போது தலைமையேற்று நடத்திய அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும். அதே அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும்தான், இன்றைக்கு மோடி தலைமையிலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவை வழிநடத்துகிறார்கள்.

எனவே, சாந்திக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்கும் வகையில் பிரதமர் நேரடியாகத் தலையிட வேண்டும். அப்போதுதான் இந்திய வீரர்களுக்கு தேசத்தின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். அதற்கேற்றார்போல, விளையாட்டுத் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கிராம அளவில் கண்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கும் வகையில் பயிற்சி தளம், உபகரணங்களை அளிக்க வேண்டும்.

' விளையாட்டு ஆணையத்தில் நடக்கும் அரசியல், சாதி, மதம், பணம், செல்வாக்கு ஆகியவை நுழையாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். மேலும், அப்துல்கலாம் ஒலிம்பிக் திறனறிதல் வளர்ச்சி அகாடமிக்கு சாந்தியை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, கிராமங்களில் உள்ள சாதனை வீரர்களைக் கண்டறிந்து தயார்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.

-ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement