'இந்தியர்களுக்கு ஈகோ அதிகம்!' - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

சாதனை படைக்கும் ஒவ்வொரு இந்தியர்களும் அதிக ஈகோ கொண்டவர்களாக இருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி, மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாராயண மூர்த்தி, ''இந்தியர்கள் முன் சவாலாக இருப்பது அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரவர்க்கமோ அல்ல. ஈகோதான் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. ஒவ்வொரு சாதனைக்கும் நம்மிடம் ஈகோ அதிகரித்துக் கொண்டேப் போகிறது. நம்மை விட அதிகமாக சாதிப்பவர்களை திறந்த மனதுடன் வரவேற்க நாம் தயராக இல்லை.

திறமையாளர்களை மதிக்க வேண்டும். அப்போதுதான் நாம் வேகமாக முன்னேற முடியும். அதிகாரவர்க்கத்தினர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தோடு இங்கு நடந்து கொள்கின்றனர். எல்லாம் தெரியும் என்ற சிந்தனை எந்த திட்டத்தையும் முனைப்புடன் செயல்பட வைக்காது. நாட்டையும் விரைவாக முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல வைக்காது.

நாட்டின் மோசமான உள்கட்டமைப்புகளால் வெளிநாட்டு முதலீட்டினை முனைப்புடன் கவர முடியாது. 12 வருடங்களுக்கு முன் ஆசியாவின் வர்த்தக, நிதித் தலைநகராக மும்பையை கொண்டு வரத் திட்டமிட்டோம். இன்னும் நம்மால் முடியவில்லை. நாம் இன்னும் புற்று நோயை குணப்படுத்த பிளாஸ்திரி போட்டுக் கொண்டிருக்கிறோம்.

பிற வளரும்  நாடுகளில் உள்ள நகரங்களுடன் நமது நகரங்களை அரசாங்கம் ஒப்பிடக் கூடாது. இந்தோனேஷியா, மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளில் நகரங்கள் அபார வளர்ச்சிக் கண்டுள்ளன. அந்த நாடுகள் அதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டன என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. '' என்றார்.


 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!