புதிய சட்டத்தில் முதல் நடவடிக்கை: மைனர் வாலிபரை வயது வந்தவராகக் கருதி விசாரணை! | First Action against Minor boy as per New Law

வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (18/08/2016)

கடைசி தொடர்பு:08:34 (18/08/2016)

புதிய சட்டத்தில் முதல் நடவடிக்கை: மைனர் வாலிபரை வயது வந்தவராகக் கருதி விசாரணை!

புதுடெல்லி: புதிய சட்டத்தில் முதல் நடவடிக்கையாக, பலாத்கார வழக்கில் கைதான மைனர் வாலிபரை வயது வந்தவராக கருதி விசாரணை நடத்துமாறு சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட ‘மைனர்’களையும் வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தும் வகையில், சிறார் நீதி மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய ஒரு ‘மைனர்’ வாலிபருக்கு எதிராக சிறார் நீதி வாரியம் முதல்முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 17 வயதான ‘மைனர்’ வாலிபர் ஒருவர், பள்ளியில் படித்து வரும் 17 வயதான மாணவியை கடந்த மார்ச் 31-ம் தேதி பள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றார். பின் காரில் நொய்டாவுக்கு கடத்திச் சென்று அங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சில நாட்களுக்கு பின், இச்சம்பவம் பற்றி மாணவி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள சிறார்கள் நீதி வாரியத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில், இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது தான் இந்த சம்பவம் என்று வாலிபரின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், சிறார் நீதி வாரிய நீதிபதி அருள் வர்மா அதை ஏற்கவில்லை. இதை தொடர்ந்து அவர் அளித்த பரபரப்பு உத்தரவில், ''இது பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உறவு என்பதற்கான ஆதாரம் ஒரு துளியும் இல்லை.

மாணவியை பள்ளியில் இருந்து பைக்கிலும், காரிலும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். ஆவணங்கள் மற்றும் மாணவியின் வாக்கு மூலத்தை வைத்து பார்க்கும்போது, இது, திட்டமிட்டு நடந்த பலாத்காரம் என தெரிய வருகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளை அவர் திட்டமிட்டு உருவாக்கியதாக அரசுத்தரப்பு கூறியது ஏற்புடையதாக உள்ளது. ‘மைனர்’ வாலிபருக்கு மனநிலை பாதிப்பு எதுவும் இல்லை. நல்ல மனநிலையுடன்தான் இருக்கிறார்.

தூண்டி விடப்பட்டு, அவர் இதை செய்யவில்லை. மது போதையில்தான் மாணவியை கடத்தி உள்ளார். எனவே, குற்றம் இழைக்கக்கூடிய அளவுக்கு அவரது மனநிலை இருந்திருப்பது தெளிவாகிறது. அதனால் அவரை வயது வந்தவராக கருதி, விசாரணை நடத்த வேண்டும். அதற்காக இந்த வழக்கு, இத்தகைய வழக்குகளுக்காக அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது" என்று கூறி உள்ளார்.

இதற்கு முன் கொலை வழக்கு, கார் ஏற்றி தப்பிய வழக்கு ஆகியவற்றில் சிக்கிய ‘மைனர்’ வாலிபர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரிக்க சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாலியல் பலாத்கார வழக்கில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்