வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (19/08/2016)

கடைசி தொடர்பு:18:52 (19/08/2016)

ஆன்லைன் விற்பனை! - மதுக்கொள்கையில் தள்ளாடும் கேரள அரசு!

து வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை... கூட்டத்தில் திமிறிக்கொண்டு நிற்கவும் வேண்டியதில்லை. ஆன்லைனில் ஒரு க்ளிக் செய்தால் போதும். ஈஸியாக மதுபாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம். இன்டர்நெட் பயன்படுத்தத் தெரியாத குடிமகன்கள், போனிலும் தேவையான மதுபாட்டில்களை ஆர்டர் செய்யலாம். இந்த வசதிகள் எல்லாம் மது ஆறாக ஓடும் தமிழ்நாட்டில் என்று நினைத்துவிடாதீர்கள். பூரண மதுவிலக்கு அறிவித்துள்ள கேரளாவில்தான் இந்தக் கூத்து.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில், 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு என்ற நோக்கில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. 2014 - 2015-ம் ஆண்டில் மட்டும் 700 மதுபானக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டன.  தற்போது அரசு அனுமதி பெற்ற எலைட் மதுபானக் கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.

தற்போது கேரளாவில் அரசு அனுமதி பெற்ற வெகு குறைவான எலைட் மதுபானக் கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. இந்தியாவில் 14% மதுவை நுகர்வு செய்துவந்த கேரளாவில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து எலைட் கடைகளில் கூட்டம் அள்ளுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு சுலபமாக மதுபானம் கிடைக்காததால், சுற்றுலா துறையின் வருமானமும் சரசரவென சரிந்துவிட்டது. இதனால் வருமானத்தை மீண்டும் பெருக்க கேரள அரசு கூட்டுறவு நிறுவனமான ‘கன்ஸ்யூமர் ஃபெட்' -ன் மூலம் 'இ-காமர்ஸ்' முறையில் மது வகைகளை விற்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஓணம் பண்டிகை முதல் இதனை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

'கன்ஸ்யூமர் ஃபெட்' இணையதளத்துக்குச் சென்று தேவையான மதுவகைகளை ஆர்டர் செய்யலாம். போன் மூலம் ஆர்டர் செய்யும் வசதியும் உண்டு. ஆர்டர் செய்த மது வகைகளை நேரில் கடைக்குச் சென்று வாங்கிக்கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, 'ஆளும் சி.பி.எம் கட்சி, மதுபான ஆலை முதலாளிகளுடன் கூட்டு வைத்துள்ளது' என கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் மது பிரியர்களை, 'ஜென்டில்மேன்' போல நடத்தவே இந்த நடவடிக்கை என கேரள அரசு கருத்து தெரிவித்து, குடிமகன்களின் வரவேற்பை அள்ளுகிறது.

-  ஆ.நந்தகுமார்


நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்