'நீட்'டாக வசூலில் இறங்கிய மருத்துவக் கல்லூரிகள்! -தனியார் கொள்ளையை தடுப்பாரா மோடி?

ருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு (நீட்) முடிவுகள் வெளியான பிறகும் விண்ணப்பங்களை வழங்காமல் இழுத்தடிக்கின்றன தனியார் கல்லூரிகள். ' மத்திய அரசே தலையிட்டு ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என வேண்டுகோள் வைக்கின்றன மருத்துவ சங்கங்கள்.

'மருத்துவக் கல்விக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நீட் தேர்வு மூலம் மட்டும் நிரப்ப வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான முதல்கட்டத் தேர்வை கடந்த மே மாதம் நடத்தியது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். நாடு முழுவதிலும் இருந்து ஆறு லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர். ' தேர்வு முக்கியமா? இல்லையா?' என்ற குழப்பம் நீடித்ததால் பல பேர் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து, ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 13 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். கடந்த 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தனியார் கல்லூரிகளில் விண்ணப்பங்களை வாங்கச் சென்றால், ' விண்ணப்பம் தீர்ந்துவிட்டது. மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் சென்று கேளுங்கள்' எனத் திருப்பி அனுப்புகின்றன தனியார் கல்லூரிகள். " தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் மாணவர் சேர்க்கையில் பல கல்லூரிகள் வெளிப்படையாக நடந்து கொள்கின்றன. தமிழ்நாட்டில் நிலைமை அவ்வாறாக இல்லை" என வேதனையோடு தொடங்கினார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத். அவர் நம்மிடம்,

" நீட் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டன. கட்டுக்கடங்காத வகையில் கட்டாய நன்கொடை வசூல் நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கையில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. இதைக் களைய வேண்டுமானால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் ஒட்டுமொத்த இடங்களுக்கும் மத்திய அரசே மதிப்பெண் தரவரிசையை நிர்ணயிக்க வேண்டும். மாணவர்களின் தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களே நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்துவதால்தான் முறைகேடுகள் அதிகரிக்கின்றன. இதை அரசு அனுமதிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கை அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். கல்விக் கட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களையும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தும் நடைமுறையைக் கொண்டு வந்தால்தான் தனியார் கல்லூரிகளின் முறைகேட்டைத் தடுக்க முடியும்.

தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படுவதால், ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் சேரும் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மத்திய அரசே ஏற்பதற்கு முன்வர வேண்டும். அதேபோல், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். நீட் மூலம் மட்டுமே  வெளிநாடுவாழ் மாணவர்களுக்கும் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், தங்களுக்குள் மட்டும் தனியாக நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இவர்களும் நீட் தேர்வின் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் சட்டத்தின் மூலம், மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு பிரதமர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளையும் வணிகமயமாக்கலையும் தடுப்பதற்காகவே, நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறிக் கொள்கிறது மத்திய அரசு. அதற்கேற்ப தனியார் கல்லூரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, மருத்துவக் கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளை காக்கும் வகையிலும், மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார் ஆதங்கத்தோடு.

-ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!