Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எனக்கான விலையை இன்பாக்ஸில் சொல்லாதீர்கள்!- நெட்டிசன்களை தலை குனியவைத்த இளம்பெண்

பெண்ணை 14 வினாடிகள் உற்றுப்பார்ப்பது தொடர்பாக கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு கேரள இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் தனது முகநுாலில் கருத்து தெரிவித்திருந்தார். நெட்டிசன்கள் இதற்கு மோசமான எதிர்வினையாற்ற, அதற்கு இந்த இளம்பெண் அளித்த துணிச்சலான பதில் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

கொச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் மாணவர்கள் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது  வருத்தம் அளிப்பதாக கருத்து தெரிவித்த அவர், 'பெண்கள் பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் தரக்குறைவாக பேசினாலோ அல்லது தகாத முறையில் நடந்தாலோ பெண்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க பெண்கள் சரியான சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்'' என பேசினார்.

இது கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் சலசலப்பை உண்டுபண்ணியது. இந்த கருத்துக்கு ஆண்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நெட்டிசன்கள்  ரிஷிராஜ் சிங்கின் கருத்துக்கு மீம்ஸ், அனல் தெறிக்கும் கண்டனம் என தங்கள் எதிர்ப்பை பல வழிகளிலும் தெரிவித்தனர்.

''ஒரு பெண்ணை 13 விநாடிகள் மட்டும் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்கிறோம். பின்னர்  மீண்டும் 13 விநாடிகள் பார்க்கிறோம்.  அப்போ சட்டம் என்ன சொல்லுது' எனவும், 'ஆண்கள் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியும்'' என்றும் அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். ''அடுத்த முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது டைமர் வைத்துக் கொண்டு பேசுகிறேன். இல்லையென்றால், எனக்கு சிக்கல்கள் வரும்'' என இன்னொரு நெட்டிசன் ரிஷிராஜ் சிங்கை கலாய்த்தார். இப்படி கலால் வரித்துறை ஆணையரின் பேச்சு கேரளாவில் விவாதப் பொருளானதோடு அந்த வாரத்தில் வைரலானது.

இதனிடையே இந்த கருத்து தொடர்பாக கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த வனஜா வாசுதேவ் என்ற இளம் பெண் எழுத்தாளர், தனது முகநூலில் ஒரு கருத்தை பதிவு செய்தார்.

‘’ஆணும் பெண்ணும் எதிர்பாலினத்தவரை உற்றுப்பார்ப்பது சகஜமான ஒன்றே.. நான்கூட அழகால் கவரப்பட்டு ஆண்களை பார்த்து ரசித்திருக்கேன். ஒரு ஆண் ஒரு பெண்ணை உற்றுப்பார்ப்பது ஒன்றும் துன்புறுத்தலோ அல்லது வேறு எதுவோ அல்ல. உண்மையில் அப்படி ஒரு பார்வை பெண்களுக்கு தங்கள் மீது தன்னம்பிக்கையையே ஏற்படுத்தும்.’’ - இதுதான் அந்த பதிவின் சுருக்கம்.

கொஞ்ச நேரத்தில் கலாச்சார துாதுவர்களாக பல ஆண்கள் வனஜாவின் பதிவுக்கு எதிர்வினையாற்றத் துவங்கினார்கள். சீறிவந்தன கண்டனக்கணைகள். அந்த பதிவிற்கு வந்த கமெண்ட்கள் மட்டுமே 1100. அதில் வனஜாவை கொச்சையாக விமர்சித்துவந்த கமெண்ட்கள் பாதிக்கும்மேல்.

''நீயும் ஒரு பெண்ணா, கலாச்சாரத்தை சீரழிக்கிற ************என்ன? ' என மவுஸ் கூசும்படியான வார்த்தைகளால் அவரை அர்ச்சிக்க துவங்கினர். பலர் அவரது இன்பாக்ஸில் அவரது விலை என்னவென்று அருவருப்பான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

எழுத்தாளர் என்பதால் இந்த பதிவுகளுக்கு அவர் ஆத்திரப்படாமல் நிதானமாகவே விரிவான பதிலை அவர்களுக்கு தந்தார் வனஜா தன் முகநுாலில்.

''5 வயதில் தந்தையை இழந்த என்னையும் என் சகோதரனையும் தாய் வறுமையுடன் போராடி காப்பாற்றினார். நாங்கள் பசியோடு கழித்த நாட்கள் ஏராளம்… காரணங்களின்றி பகலில் என் தாய் என்னை அடிப்பார். பின் இரவில் தலையை கோதிவிட்டு கண்ணீர் சிந்துவதும் வாடிக்கை. இளம் வயதில் கணவனை இழந்த அவரை வாட்டி வதைத்த தனிமையின் கொடுமையே அது என்று பின்னர் புரிய வந்தது. உறவினர்கள் நண்பர்கள் வட்டாரம் அந்த ஏழைத்தாயின் நடத்தையை கொச்சையான வார்த்தைகளால் பேசியது. இரத்த உறவினர்களும் கூட. பண்பான என் தாயாரின் நடத்தையை பற்றியும் கூச்சமே இல்லாமல் பல கதைகள் கட்டிவிட்டனர்.

அப்படிப்பட்ட சூழலிலே உழன்றுதான் பாலிடெக்னிக் முடித்தேன். கேரளாவில் பல நிறுவனங்களில் பணிபுரிந்தேன். கூடவே முதுநிலை பட்டப்படிப்பும் சிரமத்துடன் முடித்தேன்....கலாச்சாரத்தை நான் சீரழித்துவிட்டதாகக் கூறி என் அந்தரங்கத்தை கொச்சைப்படுத்தும் நீங்கள், என்னை *********கண்ணியம் பற்றியும் ஏன் பாடம் எடுக்கக்கூடாது.?

ஆம், நான் ஆண்களை ரசித்துப் பார்க்கிறேன். ஆனால் ஒரு ஆணை நான் பார்ப்பதாலேயே அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் ஒதுங்கி அவர்களுக்கு ஒத்துழைக்கத் தயாராகிவிடுவேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்...வறுமையோடு போராடி குடும்பத்தை காப்பாற்றிய ஒரு விதவைத்தாயின் மகளான எனக்கு உங்கள் வசவுகள் எள்ளளவும் காயப்படுத்தாது. இந்த பதிவை பார்த்து என் பெண்மைக்கு நீங்களே ஒரு விலை நிர்ணயம் செய்ய உங்களுக்கு தைரியம் உள்ளதா? அப்படியே உங்களுக்கு தைரியம் இருந்தால் அதை வெளிப்படையாக கமெண்ட்டில் போடுங்கள். இன்பாக்சுக்குள் வந்து சொல்லாதீர்கள்…''

வனஜாவின் இந்த தெளிவான உருக்கமான பதில் அவரை காயப்படுத்தியவர்களை சிந்திக்கவைத்திருக்கிறது. அதன் எதிரொலியாக பலர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளனர். அதேசமயம் சிலர் வசவுகளை தொடர்ந்தபடி உள்ளனர்.

வனஜாவின் இந்த பதிவு முகநுாலில் பதிவிடப்பட்ட அன்றே 2300 முறை பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி தன்னை ஒழுக்கக்கேடான பெண்ணாக சித்திரித்தவர்களை கண்ணியமாக அதே நேரத்தில் சாட்டையடியான பதிலால் சிந்திக்கவைத்த வனஜாவின் பதிவை கேரளாவின் முன்னணி நடிகர்கள், பிரமுகர்களும் ஷேர் செய்து வைரலாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement