Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைதியான காஷ்மீரே இந்தியாவின் எதிர்காலம்! - ராஜ்நாத் சிங்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள். அமைதியான காஷ்மீரே இந்தியாவின் எதிர்காலம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் கடந்த மாதம் சுட்டுக் கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 9–ம் தேதி முதல் தொடர் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. சுமார் 48 நாட்களாக நடந்து வரும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு, இதுவரை 68 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்..

இந்த போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கும், முழு அடைப்பும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், அங்கு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய–மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக போலீசார் பெல்லட் எனப்படும் சிறிய ரக தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுடுவது வழக்கமாக உள்ளது. இந்த வகைத் தோட்டாக்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அது கண்களில் படும்போது சுடப்படுபவரின் கண்கள் பார்வைத் திறனை இழந்து விடுகின்றன. அதனால், இந்த வகை துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே இந்த துப்பாக்கிகளுக்கு பதிலாக மாற்று கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்து உள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். அங்கு அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்திய அவர், முதல்வர் மெஹபூபா முஃப்தியை ஸ்ரீநகரில் சந்தித்து பேசினார். அதன்பின் அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''காஷ்மீரில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப ஒவ்வொருவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன். இளைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள். காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலம், நாட்டின் பிற பகுதிகளுடன் தொடர்புடையது. இளைஞர்கள் தங்கள் கைகளில் கம்ப்யூட்டரையும், புத்தகங்களையும் தான் ஏந்த வேண்டுமே தவிர, கற்களை அல்ல. இவர்கள் கற்களைக் கையில் எடுப்பதற்கு அனுமதி கொடுத்தது யார்? அப்படி அனுமதி கொடுத்தவர்கள், இந்த இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க உத்தரவாதம் தருவார்களா? இந்த இளைஞர்களை மத்திய ஆயுத படை மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியில் அமர்த்துவது தொடர்பாக மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளுமாறு பாதுகாப்பு படையினரை கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களும் நிதானமாகவே நடந்து கொள்கின்றனர். அதனால்தான் வன்முறையாளர்கள் தாக்கியதில் 4,500–க்கும் அதிகமான வீரர்கள் காயமடைந்துள்ளனர். டெல்லியில் இருந்து அனைத்துக் கட்சிக் குழு விரைவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு செல்ல உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் மக்களின் கவலைகளைத் தீர்க்க ஓர் உயரதிகாரியை மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்க உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க நாங்கள் விரும்புகிறோம். காஷ்மீரின் எதிர்காலம் வடிவமைக்கப்படா விட்டால் இந்தியாவின் எதிர்காலத்தையும் வடிவமைக்க முடியாது.

இங்கு பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் பெல்லட் துப்பாக்கிகள் விரைவில் நிறுத்தப்படும். பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்று என்ன என்பதை ஆராய்வதற்கு நான் நியமித்துள்ள நிபுணர் குழு இன்னும் சில தினங்களில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும். அதற்குபின் பெல்லட் துப்பாக்கிகளுக்கு ஒரு மாற்றை நாங்கள் வழங்குவோம். கடந்த 2010-ல், பெல்லட் துப்பாக்கி என்பது அபாயகரமான ஆயுதம் அல்ல என்றும் அதனால் குறைந்த அளவு பாதிப்பே ஏற்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு மாற்று இருக்க வேண்டும் என்று தற்போது நாம் கருதுகிறோம்.

 

வாஜ்பாய் வகுத்த கொள்கையான காஷ்மீரின் பன்முக நெறிகள், மனிதநேயம், ஜனநாயகம் என்ற வரம்புக்குட்பட்டு, யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தயாராக உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்படியொரு நிலைமையை உருவாக்க முயற்சி மேற்கொள்வோரை அடையாளம் காணுமாறு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். காஷ்மீரில் கடந்த 2014-ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது பாதுகாப்புப் படையினர் ஆற்றிய மீட்புப் பணிகளை மறக்க வேண்டாம் என்று இந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement