‘தர்ஹாவுக்கு செல்வதற்கு பெண்களுக்கு உரிமை உள்ளது!’ - மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவுக்கு, ‘பெண்கள் செல்ல உரிமை உள்ளது’ என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்பை வழங்கியுள்ளது.

பாரதி முஸ்லிம் மகிலா அன்டோலன் அமைப்பைச் சேர்ந்த ஜாகியா சோமான் மற்றும் நூர்ஜகான் சபியா  ஆகியோர் 2014-ம் ஆண்டு பொது நல மனு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவின் மீதான விசாரணையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.கனடே மற்றும் ரேவதி மொஹிட்டி ஆகியோர் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
 
‘‘பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டக் கூடாது!’’ 

‘தர்ஹாவுக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 15, 19 மற்றும் 25 ஆகியவற்றில் சொல்லப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம், அனைவருக்கும் பொதுவானது. எனவே, தர்ஹாவின் மையப் பகுதிக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது. மதத்தை வழிநடத்தவும், அதன் கொள்கைகளைப் பின்பற்றவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. எனவே, பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டி நாம் தடைபோடக் கூடாது. தர்ஹாவுக்குச் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அந்த அறக்கட்டளை உறுதிபடுத்த வேண்டும்’’ என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். ‘‘வழக்கை, அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அதிகாரம் உள்ளது’’ என்றும் நீதிபதிகள் அதில் தெரிவித்துள்ளனர்.
 
‘‘வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!’’

இதுதொடர்பாகச் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், ‘‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பு, பெண்களின் பல போராட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமையும்’’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

‘‘பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!’’

இதுதொடர்பாக கவிஞர் சல்மாவிடம் பேசினோம், “எந்த வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால், அதற்குத் தடை விதிக்கப்படுவது சரியல்ல. ஆண், பெண் வித்தியாசங்கள் பார்ப்பது  சரியல்ல. பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதேபோன்று பாலினச் சமத்துவம் கிடைக்க வேண்டும்.  வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்ல வேண்டுமா... வேண்டாமா என்பதைத் தனிநபர்கள்தான் முடிவு செய்ய  வேண்டும். அவற்றை இதுபோன்ற அமைப்புகள் முடிவு செய்யக் கூடாது. பாலினப் பாகுபாட்டையும் தனிமனித உணர்வுகளையும் மதிக்காமல் தடை விதிப்பது சரியல்ல’’ என்றார்.

இந்தத் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்மறையீடு செய்யப்பட இருப்பதாக, தர்ஹா அறக்கட்டளை நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. 1431-ம் ஆண்டு கட்டப்பட்ட ஹாஜி அலி தர்ஹா மிகவும் பழமை வாய்ந்தது. இதில், பெண்கள் செல்ல அந்த தர்ஹா அறக்கட்டளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

- கே.புவனேஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!