Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்தாம் வகுப்பு கூட பாஸாகாத இந்திய மாணவிக்கு அமெரிக்க எம்.ஐ.டியில் இடம் !

மும்பையை சேர்ந்தவர் சுப்ரியா. அங்குள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இவரது மகள் மாளவிகா. தாதரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்தார். மாளவிகா  அபாரமாக படிக்கக் கூடியவர். படிப்புல முதல் இடம்தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போது, திடீரென்று, அவரது தாயார் சுப்ரியா மகளின் படிப்பை நிறுத்தப் போவதாகக் கூறினார். சொன்னது போல,  படிப்பை நிறுத்தியதோடு, பள்ளிக்கும் போக வேண்டாம்னு கூறி வீட்டோடு வைத்து கொண்டார். அவரது கணவருக்கோ அதிர்ச்சி. அக்கம்பக்கத்தினருக்கும் ஏன் இப்படினு புரியல. யார் சொல்லிப் பார்த்தும் சுப்ரியா கேட்கவில்லை. தனது  முடிவில் உறுதியாக இருந்தார்.

மாளவிகாவுக்கும் முதலில் தாயின் முடிவு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பின், படிப்பை விட்ட மகளை 'உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்; என்னவெல்லாம் படிக்க முடியுமோ படி' என்று சுப்ரியா கூறி விட்டார். வீட்டில்  வகுப்பறை மாதிரியே மகளது அறையை மாற்றினார் சுப்ரியா. தாயார் அளித்த சுதந்திரமும் உற்சாகமும் மாளவிகாவுக்கு புதியதாககவும் சற்று வித்தியாசமாகவும் தெரிந்தன. கொஞ்சம் தைரியமும் தெம்பும் பிறந்தது.  தன்னை வைத்து தாயார் ஏதோ திட்டமிடுவதையும் மாளவிகாக கொஞ்ச நாட்களிலேயே புரிந்து கொண்டார்.  உலகத் தகவல்கள் அனைத்தையும் கரைத்து குடிக்க ஆரம்பித்தார்.  தூக்கத்தில் எழுப்பி என்ன கேட்டாலும் எதற்கும் மாளவிகா பதில் சொல்வார். ஒரு கட்டத்தில் வாழும் விக்கிப்பீடியாகவே மாளவிகா மாறினார்.

அதுமட்டுமல்ல, கம்ப்யூட்டர் புரோகிராம் செய்வதிலும் மாளவிகாவுக்கு அபாரத் திறமை. சர்வதேச அளவில் நடைபெறும் இன்டர்நேஷனல் ஒலிம்பியாட் இன் இன்பார்மடிக்ஸ்சில் இரு முறை வெள்ளிப் பதக்கமும் ஒரு முறை வெண்கலப்பதக்கமும் வென்றார் மாளவிகா. இந்த போட்டியில் உலகில் உள்ள 84 நாடுகளைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் பங்கேற்பார்கள். அவ்வளவு போட்டி மிகுந்த களம் இது. அதிலேயே மூன்று முறை பதக்கம் வாங்கியதால், மாளவிகாவின் புரோஃபைல்  உலகின் முதல் தர பல்கலையான அமெரிக்காவின் 'மாசாசெசூட்ஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியை' கவர்ந்து இழுத்தது. இதையடுத்து மாளவிகாவுக்கு தங்கள் பல்கலையில் இடம் அளித்து கவுரவித்துள்ளது. இத்தனைக்கும் மாளவிகாவிடம் பத்தாம் வகுப்பு சர்டிபிகேட் கூட கிடையாது.

மாளவிகாவின் அறிவுத்திறனை கணக்கில் கொண்டு 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெடிக்கஸ் 'பல்கலையில் மட்டும் எம்.எஸ்.சி படிக்க ஒரு வாய்ப்பு இருந்தது. மற்றபடி, சர்டிபிகேட் இல்லாமல் இந்தியாவில் கலைக் கல்லூரி பக்கத்தில் கூட போக முடியாது. 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' பக்கம் தலை வைத்துக் கூட படுக்கக் முடியாது.

ஆனால், இப்போது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மாசாசெசூட்ஸ் பல்கலையிலேயே மாளவிகா 'பேச்சிலர் ஆப் சயின்ஸ் 'படிக்கப் போகிறார். கடந்த 4 ஆண்டுகளாக கியூ.எஸ் ரேங்கில் இந்த பல்கலைதான் முதலிடத்தில் உள்ளது. மாசாசெசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷனல் ஒலிம்பியாட் ஆப் இன்பார்மெடிக்சில் பதக்கம் வெல்லும் ஒருவருக்கு முற்றிலும் ஸ்காலர்ஷிப்புடன் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. முறையான சான்றிதழ் இல்லாத போதும் மாணவர்களின் அறிவுத்திறனைக் கருத்தில் கொண்டு வாய்ப்பு  அளிக்கிறது இந்த அமெரிக்க பல்கலை.

தற்போது பதினேழு வயதே நிரம்பிய மாணவி மாளவிகா, '' திடீர்னு பள்ளிக் கூடம் போகா வேண்டாம்னா எப்படியிருக்கும்?. என்க்கும் அப்படிதான் இருந்தது. கொஞ்ச நாள் வருத்தமா இருந்தது.  ஆனா... படி படினு சொல்லாம எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்தது பிடிச்சிருந்தது. அப்பாதான் அம்மாவை திட்டிட்டே இருந்தாங்க. எனக்கு கம்யூட்டர் புரோகிராம் செய்யுறது ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்கு முக்கியத்தும் கொடுத்து நிறைய கத்துக்கிட்டேன்'' என்றார்.

ஆனந்த கண்ணீரில் மிதக்கும் தாயார் சுப்ரியாவோ.. '' நாங்க மிடில்கிளாஸ் குடும்பம்தான். தன்னார்வத் தொண்டு நிறுவனத்துல எனக்கு வேலை. அங்க ஒன்பது பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்த குழந்தைங்க கூட கேன்சரால பாதிக்கப்பட்டிருந்தாங்க. அதெல்லாம் பார்த்து பார்த்து மனசு ரொம்ப வலிச்சுது.  என் மனச அது ரொம்ப பாதிச்சிருந்தது.என்னோட மக சந்தோஷமா இருக்கனும். பள்ளியிலோ அல்லது வேறு எங்கேயோ அவ மேல எந்த ஒரு அழுத்தமும் இருந்துடக் கூடாதுனு நினைச்சேன். அறிவை வளர்க்க முதல்ல நம்மள சந்தோஷமா வச்சுக்கிறது ரொம்ம முக்கியம். சந்தோஷமாக இருந்தாதான் ஒரு விஷயத்தை நாம எளிதா கத்துக்குவோம். அதான் மகளோட படிப்பை நிறுத்தினேன். நானும் அவளுக்காக  வேலையை விட்டேன். அவளுக்குத் தேவயயானதை மட்டும் செஞ்சு கொடுத்துட்டு, சுதந்திரமா விட்டுட்டேன். கொஞ்ச நாள்ளேயே அவ அவ்வளவு சந்தோஷமா மாறிட்டா. என்னோட வீட்டுக்காரர்தான் என்னைத் திட்டிட்டே இருப்பாரு வாங்குனத் திட்டுக்குக்கு இப்போ பதில் கிடைச்சிருக்கு'' என்கிறார்.

தைரிய அம்மாதான்...!

-எம். குமரேசன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement