Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மஜ்கிகள் பாமரர்களாக இருப்பதுதான் வேதனை!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இறந்து போன மனைவியின் உடலை 12 கிலோ மீட்டர் தொலைவு தூக்கி சென்றார் ஒடிசாவை சேர்ந்த மஜ்கி. கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் என்ற கிராமத்தை  சேர்ந்த மஜ்கியின் மாத வருமானம் வெறும் ரூ. 1,500 மட்டும்தான். இதனை வைத்துக் கொண்டுதான் மஜ்கி,நோயால் பாதிக்கப்பட்ட மனைவியுடனும் 3 மகள்களுடனும் வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.

மஜ்கி போன்ற பாமரர்களுக்கு உதவுவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறுத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த திட்டங்கள் குறித்து மஜ்கி போன்றவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது ஒரு வேதனையான விஷயம். அதிகாரிகளை அணுகினாலும் முறையான உதவி கிடைக்காமல் போவதும் லஞ்சம் கேட்பார்களோ என்ற பயமும் இன்னொரு காரணம். இதனால், மஜ்கிகள் அரசின் திட்டங்களுக்கு அருகே கூட போவதில்லை.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ், மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1.30 லட்சத்தின் வீடுகள் கட்டிக் கொடுக்க வழிவகை உள்ளது. ஆனால், இந்த திட்டத்தின் கீழ் மஜ்கி எந்த பயனும் அடையவில்லை. மனைவி இறக்கும் வரை, மண் சுவரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில்தான் வாழ்ந்துள்ளார்.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை உள்ளடக்கிய தாமுல் ராம்பூர் தாலுக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருடத்தில் 100 நாட்கள் வேலை கிடைக்கும். நாள் ஒன்றுக்கு 174 ரூபாய் சம்பளம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மஜ்கி பார்த்த வேலைக்காக 4,064 ரூபாய் அவருக்கு சம்பளப்பாக்கி இருக்கிறது. இந்த அக்டோபர் நெருங்கி விட்டது. அந்தத் தொகை இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இந்திய வனச்சட்டத்தின்படி, வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு  மனை பெற உரிமையுள்ளது. இந்த திட்டத்தின்படி மஜ்கி உள்ளிட்ட எந்த மெல்கர் கிராமவாசியும் மனை பெற்றிருக்கவில்லை. ''மெல்கர் கிராம மக்கள் முறையாக எங்களை அணுகவில்லை. இந்த திட்டத்தின் கீழ், கோரப்பட்டுள்ள எந்த மனுவும் நிலுவையில் இல்லை.ஆனால், மெல்கர் கிராமத்தில் இருந்து ஒரு விண்ணப்பம் கூட வரவில்லை. அந்த ஊரில் ஒரு கிராம சபா கூட கிடையாது '' என்கின்றனர் வனத்துறையினர்.  

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தகுதியுள்ள இந்திய குடிமகன் மாநிய விலையில் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ உணவுதானியங்கள் பெறலாம். மஜ்கியும் ரேஷன் அட்டை வைத்துள்ளார். ஆனால் மாதம் 25 கிலோ அரிசி மட்டும்தான் அவர் பெற்று வந்துள்ளார். தற்போது அவரது மனைவியும் இறந்து விட்டதால், அது 20 கிலோவாக குறைந்து விட்டது.

ராஷ்டிரிய ஸ்வாஸ்திய பீமா திட்டத்தின் கீழ், ஆதிவாசி மக்கள் ரூ.30 ஆயிரம் வரை தனியார் மருத்துவமனையில் கூட சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மஜ்கியிடம் அந்த கார்டு இல்லை. கலாகண்டி அரசு மருத்துவமனையில் இந்த திட்டத்திற்கான கார்டினை பெற வேண்டும். ஆனால், கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு யாரும் இந்த திட்டத்தில் சேரவில்லை.

ஜனனி சிசு சுரக் ஷா திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். உணவு, மருந்துகளும் உள்ளிட்ட விஷயங்களையும் மருத்துவமனையே வழங்கும். இது தவிர ரூ. 1,400 தனியாக வழங்கப்படும். இந்த திட்டம் வந்த பிறகுதான் மஜ்கியின் 3வது மகள் சவுலி பிறந்தார். சவுலியும் வீட்டிலேயே பிறந்து விட்டதால், அந்த தொகையும் மஜ்கியின் மனைவிக்கு கிடைக்காமல் போய் விட்டது.

மஜ்கியின் மெல்கர் கிராமத்தில், ராஜீவ் காந்தி, கிராம மின்வசதி அளிக்கப்படும் திட்டத்தின் கீழ் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. மஜ்கியும் 2 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.160  மின்சாரக் கட்டணமாக செலுத்தியுள்ளார். ஆனால், மின்சார கம்பங்களின் மீது மரங்கள் விழுந்து சேதமடைந்ததால், கடந்த 8 மாதங்களாக மஜ்கியின் கிராமத்தில் மின்சாரம் இல்லை.  மெல்கர் கிராம மக்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை என இப்போது ஒடிசா மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மனைவி உடல் நிலை மோசமானதும்  மகளிர் சுயஉதவி குழுவிடம் இருந்து 5  வட்டிக்கு மஜ்கி  ரூ. 2 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். கையில் இருந்த பணத்துடன் வாகனம் ஒன்றை பிடித்து முதலில் மெல்கர் கிராமத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்ருண்டி மருத்துவமனைக்கு மனைவியை கொண்டு சென்றுள்ளார். அங்கே சென்றால் மருத்துவர் இல்லை. பின்னர்தான், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானிபட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். போக வர வாகனத்துக்கு 3 ஆயிரம் பேசியுள்ளார். ஆனால், மருத்துவமனையில் தங்க வேண்டியது இருந்ததால், வாகனத்தை திரும்ப அனுப்பி விட்டார். அந்த வகையில் 3 ஆயிரம் செலவாகியுள்ளது.

அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனைக்கு ரூ.300 செலுத்தியுள்ளார். 200 ரூபாய்க்கு மருந்துகள் வாங்கியுள்ளார். மனைவி பெயரில் பதிவு கட்டணமாக 100 கட்டியுள்ளார். பேப்பர் சீல் வைக்க ரூ.10  செலுத்தியுள்ளார். முடிவில், மனைவி இறக்கும் போது மஜ்கியின் கையில் ரூ.300  மட்டுமே எஞ்சியிருந்துள்ளது.

ஆகஸ்ட் 23ம் தேதி  மஜ்கியின் மனைவி இறந்து போனதும் 12 வயது மகள் சாந்தினி கதறி அழுதுள்ளார். மஜ்கி மருத்துவமனையில் இருந்த பலரிடம் உதவி கேட்டு கதறியுள்ளார். எந்த பலனும் இல்லை. விரக்தியடைந்த நிலையில்தான் மனைவியின் உடலை லுங்கியில் கட்டி தோளில் சுமந்தவாறு கொண்டு சென்றுள்ளார். இடையில் போலீஸ்காரர்கள் மறித்து, என்னவென்று கேட்டுள்ளனர். மஜ்கி, 'இது எனது மனைவியின் உடல்' எனக் கூறியுள்ளார். அவர்களும் ஓகே என்றவாரே நகர்ந்து விட்டனராம்.

இரவு நேரத்தில்,பவானிபட் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், உதவி ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகத்தை எல்லாம் மனைவியின் உடலுடன்தான் மஜ்கி கடந்து வந்திருக்கிறார். ஆனால், யாரும் என்னனு கூட கேட்கவில்லை. மாவட்ட ஆட்சியர்., பிருந்தனோ.. 'இரவு நேரத்துல இதலாம் யார் பார்த்துட்டு இருக்கப் போறா ' என்கிறார். இரவு முழுக்க மனைவியின் சடலத்துடன் மகளுடன் மஜ்கி நடந்து வந்திருக்கிறார். காலையில்தான் பத்திரிகையாளர்கள் மஜ்கியின் உதவிக்கு வந்துள்ளனர்.

அதற்கு பிறகு நாடே அதிர்ந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும். அதனால், இப்போது மஜ்கிக்கு கிடைத்த பலன் என்ன?

மாவட்ட நிர்வாகத்தில் இருந்து 30 ஆயிரம் பணம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மூட்டை அரியும் வழங்கப்பட்டுள்ளது.

மஜ்கியின் 3 மகள்களின் படிப்புக்கும் உத்திரவாதம் வழங்கப்ப்டடுள்ளது. மஜ்கிக்கு 12வயதில் சாந்தினி, 7 வயதில் சோனாலி, 4 வயதில் சவுலி என்ற 3 மகள்கள் இருக்கின்றனர். மஜ்கியின் முதல் மனைவியும் நோய் காரணமாக இறந்து விட்டார். அந்த வழியில் இன்னொரு மூத்த மகளும் உள்ளார்.

சூரிய ஒளி பேட்டரி மற்றும் சூரிய ஒளித் தகடு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மஜ்கியின் கையில் கிடைக்கவில்லை.

பிரதம மந்திரி வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிராவை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் 80 ஆயிரம் ரூபாயும் மகள்கள் பெயரில் 10 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி பத்திரமும் அளித்துள்ளார்.

மஜ்கியின் மூத்த மகள் சாந்தினியின் பெயரில் 5 லட்ச ரூபாய் அல்லது மாதம் 10 ஆயிரம் நிதியுதவி அல்லது வேலை வாய்ப்பு தருவதாக சுலாப் இன்டர்நேசனல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

பஹரைன் பிரதமரிடம் இருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. ஆனால், தொகை தெரிவிக்கப்படவில்லை.

பிரதமர் மோடி அலுவலகம், நேற்று கலாகண்டி மாவட்ட ஆட்சியரிடம், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும்படி கேட்டுள்ளது.

மஜ்கிகள் பரம பாமரர்களாக இருப்பதுதான் வேதனை!

-எம். குமரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement