Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலை ஆண் பெண் சமத்துவத்தை வளர்க்கும்...! - தேசிய நாடகப் பள்ளி மாணவருடன் ஒரு உரையாடல் #2MinsRead

புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளி (NSD – NATIONAL SCHOOL OF DRAMA)  இந்தியாவில் நடிப்புக் கலையைப் பயிற்றுவிக்கும் மிகப் பிரபலமான நிறுவனம். இது 1959-ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியால் நிசாமுதீனில் தொடங்கப்பட்டது. 1975-ல் இந்தியக் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இதற்குத் தன்னாட்சி நிலை அங்கீகாரத்தை வழங்கியது. இதன் கல்வி சார்ந்த சாதனைகளைக் கண்டு 2005-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்த நிறுவனத்துக்கு நிகரில்லா பல்கலைக்கழகப் பட்டத்தை அளித்தது. ஆனால், 2011-ம் ஆண்டு NSD நிறுவனத்தின் வேண்டுகோளால் இது திரும்பப் பெறப்பட்டது. தற்போது, இந்த நிறுவனம் பஹவால்பூரில் அமைந்துள்ளது.

புகழ்பெற்ற நடிப்புக் கலைஞர் சட்டுசேன் இந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராக இருந்துள்ளார். பிரபல வாமென் கேன்ரே தற்போது இயக்குநராக இருக்கிறார். பாலிவுட்டின் பிரபலங்களான புகழ்பெற்ற நடிகர்கள் நசிருதீன்ஷா, அனுபம்கேர், இர்பான்கான், ஓம்புரி, ரட்டன் தியாம், நவாசுட் இன் சிதிக் போன்றவர்கள் NSD-ன் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெருமைக்குரிய நிறுவனத்தில் ஒன்பதாவது தமிழ் மாணவராகப் பயிற்சி பெற்றவர்தான் ஆ.அறிவழகன். இவர் வேலூர் மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர். நடிப்புப் பயிற்சிப் பட்டறை, இயக்கம் என முழுநேரமும் நடிப்புக் கலைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். ‘ஜோக்கர்’ படத்திலும் நடித்திருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்களின் இந்தப் பயணம் பற்றி?

எங்கள் கல்லூரியில் அப்போது, ‘மாற்று நாடக இயக்கம்’ என்னும் நாடகத் துறை ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் எதுவும் புரியாமல் இருந்தது. பின்பு நாடகத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுத் திறமையாகச் செயல்பட்டேன். நான் நடித்த முதல் நாடகம், ‘திருடி முனியம்மாவின் புராணம்.’ இதன்பிறகு ஆர்வம் அதிகமாகத் தொடர்ந்து என்னை அதில் ஈடுபடுத்திக்கொண்டேன். இதனால், 3 ஆண்டுகள் திறமையாகச் செயல்பட்டேன். ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் பி.எட் படிக்க முடிவு செய்தேன். அந்தச் சமயத்தில், என் கல்லூரி ஆசிரியர் எனக்குப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பெர்பார்மிங் ஆர்ட்ஸ் சீட் தயாராக இருப்பதாகக் கூறினார். அங்கிருந்து ஆரம்பித்ததுதான் நடிப்புக் கலைக்கான எனது பயணம்.

NSD-யில் நுழைந்தது எப்படி?

வித்தியாசமான முகங்கள், ஆச்சர்யமூட்டும் ஆளுமைகள் என நடிப்பின் பல்வேறு பரிணாமங்களைக் கற்று புகழ்பெற்ற நடிப்புக்கலைப் பயிற்சியாளர்களின் மாணவனாக உருவானேன். எனது முதுகலைப் பட்ட ஆய்வேட்டை, ‘ஏலகிரி, சவ்வாது மலைவாழ் தெருக்கூத்துக் கலைஞர்கள்’ என்ற தலைப்பில் நிகழ்த்தினேன். கல்லூரி ஆண்டின் இறுதியில், எனது ஆசிரியர்களின் தூண்டுகோலால் பெங்களூருவில் நடந்த NSD நேர்முகத் தேர்வுக்குச் சென்று வெற்றிபெற்றேன்.’’

NSD-ல் நீங்கள் கற்றுக்கொண்டது?

NSD-ல், நடிப்பை மட்டுமல்ல... என் ஆளுமையைச் செதுக்கவும் கற்றுக்கொண்டேன். தைரியத்தையும் கலையின் பன்முகங்களையும் கற்றேன். NSD, ஒரு நடிகர், நடிகையை மட்டுமல்ல... நல்ல மனிதர்களையும் தந்துகொண்டிருக்கிறது. இங்கு ஆண், பெண் என வேறுபாடுகள் இல்லை. நிர்வாண நாடகங்களிலும் பங்கேற்று இருக்கிறேன். ஆணும் பெண்ணும் மிகச் சரியான புரிதலில் இருப்பார்கள். என்னை அது மிகவும் பக்குவப்படுத்தியது. வித்தியாசமான நாகரிகம் என்றாலும் அது ஒரு முற்போக்கான இடம். மனித உடல் என்பது ஒன்றுமே இல்லை என்ற ஞானத்தை அங்குதான் முதன்முதலில் உணர்ந்தேன்.

 

உங்களால் மறக்க முடியாத நாடகங்கள்?

முதுகலை பயின்றபோது sad ஜோக்கர் வேடத்தில், ‘போலி முகங்கள்’ என்னும் நாடகத்தில் நடித்தேன். அந்த நாடகம் எனக்குப் பெரும் வரவேற்பைத் தந்தது. இரண்டாவது, ராஜா ரவிவர்மா இயக்கிய, ‘பிரத்யன்ய யோகந்தரயா’ நாடகத்தின் மூலம் கடுமையான உழைப்பைக் கற்றுக்கொண்டேன். மூன்றாவது, ‘திரௌபதி துகிலில்’ துரியோதனன் என்னும் மாறுபட்ட வேடத்தில் நடித்தேன். என்னுடைய முதல் நாடகத்தைப் பிரெஞ்சு நகைச்சுவை எழுத்தாளர் மௌலியாரின் கதையைக் கொண்டு, ‘குப்பன் பித்தலாட்டங்கள்’ என்ற தலைப்பில் இயக்கினேன்.’’

உங்களின் ரோல்மாடல் யார்?

என்னுடைய ரோல்மாடலாகவும், குருவாகவும் இருப்பவர் புகழ்பெற்ற நாடகப் பயிற்சியாளர் பிரபாத் பாஸ்கர்.

உங்களுடைய சுவிஸ் பயணம் பற்றி?

எனது மரியாதைக்குரிய பேராசிரியர் அமிதேஸ்குரோவர், ஒப்பாரிப் பாடல்களை ஆராய்ச்சி செய்தார். அதில், அவருக்கு உதவியாக இருந்தேன். இதனால், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பெஸ்டிவல் பெல்வார்ட் போல்வர்க் இன்டர்நேஷனல் என்னும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அது ஒரு புது அனுபவம்.’’

உங்களின் லட்சியம், கனவு?

கனவு, லட்சியம் என எதையும் நான் வைத்திருக்கவில்லை. தற்போது பல கல்லூரிகளில் நடிப்பு, இசை வாத்தியங்கள் மட்டுமல்லாமல் ஆளுமைப் பயிற்சிகளையும் நடத்திவருகிறேன். தொடர்ந்து என் பணிகள் கலைகளைச் சுற்றியே இருக்கும்.’’

- எஸ்.டேவிட் ஆரோக்கிய செல்வி

படங்கள்: ஆகாஷ்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement