Published:Updated:

`ஐரோப்பாவிலிருந்து வந்த மகன்; நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்’ -கொரோனாவால் இந்தியாவில் 2-வது உயிரிழப்பு

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸால் டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் மொத்த உலகமும் கொரோனா என்ற ஒற்றைப் பெயரின் பின்னால் இயங்கத் தொடங்கிவிட்டது. பல நாடுகளில் பொருளாதார பாதிப்பு, சுற்றுலா முடக்கம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என உலக மக்கள் அனைவரும் கொரோனாவைக் கண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர்.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,810 -யை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,436 - ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பல நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டு 72,531 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் மொத்தமாக 83 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் குணமடைந்து 71 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#CoronaUpdates `ஒற்றை இலக்க சீனா.. கவலை அளிக்கும் இத்தாலி நிலவரம்..!' -கொரோனா ஸ்டேட்டஸ்

கொரோனா வைரஸால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. முன்னதாக கர்நாடகாவில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 76 வயது முதியவரின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவிலிருந்து பிப்ரவரி 29-ம் தேதி ஹைதராபாத்துக்கு வந்த அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

கொரோனா
கொரோனா

அதன்பின்னர் கடந்த 5-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு சிகிச்சை முடித்து வீடு திரும்பிய அவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். கொரோனாவால் முதியவர் உயிரிழந்ததைக் கர்நாடகா சுகாதாரத் துறை அமைச்சர் பி.ஸ்ரீமுலு உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது நேற்று உயிரிழந்துள்ளார். இந்த மூதாட்டியின் மகன் சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து டெல்லிக்கு வந்துள்ளார். அவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அது தாய்க்கும் பரவியுள்ளது. `மேற்கு டெல்லியைச் சேர்ந்த 68 வயது பெண்மணி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கோவிட் -19 உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்” என்று டெல்லி சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு