'நீண்ட நாள் உயிர் வாழ ஆசை... உதவுங்கள்!' - மோடிக்கு ஒரு கண்ணீர் கோரிக்கை!

லக்னோ: கிட்னி பாதித்த சிறுவன், 'நான் நீண்ட நாள் உயிர் வாழ ஆசைப்படுகிறேன்' என்று உதவி கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளான்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுவன் ராகேஷ். இச்சிறுவன், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனது தந்தை கூலி வேலை செய்து வரும் நிலையில், ராகேஷ் தாய் சிறுநீரக கோளாறால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இந்நிலையில், ராகேஷின் இரண்டு சிறுநீரங்களும் பழுதடைந்து விட்டதால், வாரத்திற்கு ஒரு முறை அவனுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக ராகேஷால் உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தனது கிராமத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்ராவுக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறான் இதனால், பரிதாப நிலையில் உள்ள ராகேஷ், உதவி கோரி பிரதமர் மோடிக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளான்.

அந்தக் கடிதத்தில், ''நான் உத்தரபிரதேச அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறேன். என்னுடைய இரண்டு சிறுநீரங்களும் பழுதடைந்து விட்டதால், 5 நாட்களுக்கு ஒருமுறை நான் எனது கிராமத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்ராவுக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நான் நீண்ட நாட்கள் உயிர் வாழ மாட்டேன் என்று கூறி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், எனது வாழ்க்கை மரணப் போராட்டமாக மாறி விட்டது.

நான் நீண்ட நாட்கள் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். பெரிய மனிதனான பிறகு நான் எப்படி இருப்பேன் என்று என்னைப் பார்க்க ஆசைப் படுகிறேன். எனக்கு மருத்துவ உதவி அளிக்க நீங்கள் உதவி செய்தால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன். என்னைக் காப்பாற்றுவதற்காக என் தந்தை எங்கள் பரம்பரைக்குரிய அனைத்து விவசாய நிலங்களையும் விற்பனை செய்து விட்டார்.

ஆனால் எனது உடல்நிலையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. நீங்கள் (மோடி) மிகவும் அன்பானவர் என்று எனக்குத் தெரியும். குழந்தைகளை நீங்கள் மிகவும் நேசிப்பவர் என்பதையும் நான் அறிவேன். அதனால், எனக்கு மருத்துவ ரீதியாக நீங்கள் உதவ வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். மோடிஜி, தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். என் தந்தைக்கு நான் ஒரே மகன். நானும் மரணம் அடைந்து விட்டால், வயதான காலத்தில் என் தந்தைக்கு யாரும் உதவி செய்ய மாட்டார்கள்" என்று உருக்கமாக கூறி உள்ளான்.

-எம்.குமரேசன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!