Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று ஜே.என்.யு.’ மாணவர் சங்கத் தேர்தல்! களத்திலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்

ஜே.என்.யு.’ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் டெல்லியில் 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெரும்பாலும், இடதுசாரிக் கொள்கைகளையும் எண்ணங்களையும் இந்தப் பல்கலைக்கழகத்தில் எங்கு சென்றாலும் பார்க்கலாம். மாணவர்களின் பேச்சு, உடை, சுவரோவியங்கள் அனைத்திலும் ஒரு சித்தாந்தத்தைப் பார்க்க முடியும்.

இங்குள்ள மாணவ அரசியல் தனித்தன்மையுடையது. பொதுவாக, இந்தியாவில் மாணவ அரசியல் என்றால் ஒரு கெட்ட பெயர் உள்ளது. ஆனால், இங்கோ முற்றிலும் ஜனநாயக முறையில் அரசியல், தேர்தல், கருத்து விவாதங்கள் நடைபெறும். இந்திய மற்றும் சர்வதேச அரசியல் - சமூகப் பொருளாதார நிகழ்வுகளைக் கவனித்து அதில் தங்களது பங்கேற்பினைத் தருவார்கள். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் அப்பாவி மக்களைக் கொன்றால் உடனே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தை நடத்துவார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற அனைத்துத் தேசியக் கட்சிகளின் மாணவர் அமைப்பும் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்தியக் கல்விக்கூடங்களிலேயே ஜே.என்.யு வித்தியாசமானது. ஆண் - பெண் சமத்துவத்தை இங்கு பெரிதும் காணலாம். மிகவும் முற்போக்குச் சிந்தனையுடைய பேராசிரியர்கள், மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் இது.

இன்று (9-9-16) ஜே.என்.யு மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரில் ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உட்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடெங்கிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இந்தப் பல்கலைக்கழகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு பெரிதும் கூடியுள்ளது.

மாணவர் சங்கத்தில், தலைவர் உட்பட நான்கு பதவிகள் உள்ளன. கடந்தகால வரலாற்றில் இடதுசாரி மாணவ அமைப்பினர் இந்த நான்கு பதவிகளையும் வென்றுவந்தனர். 14 ஆண்டுகள் கழித்து சென்றவருட தேர்தலில் ஒரு பதவியை, ஆளும் பி.ஜே.பி-யின் மாணவ அமைப்பான அகிஹில் பாரதிய வித்யா பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியது. பொதுவாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எப்.ஐ ஆகியவை இந்தத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறுவார்கள். ஆனால், இந்த முறை பிப்ரவரி மாதம் நடைபெற்ற சம்பவத்துக்குப் பிறகு இடதுசாரி மாணவ அமைப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து நான்கு பதவிகளுக்கான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இதுபற்றி ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணியின் வேட்பாளர் மோஹித், ‘‘மதவாதச் சக்திகளை ஜே.என்.யு-விலிருந்து துரத்த நாங்கள் (இடதுசாரிகள்) ஒன்று சேர்ந்துள்ளோம்’’ என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன் ஜே.என்.யு-வில் வேட்பாளர்களுக்கான விவாதம் நடைபெற்றது. இதற்காக வளாகம் முழுவதும் திருவிழா கூட்டம்போல் காட்சி அளித்தது. இரவு 10 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவைத் தாண்டிச் சென்ற இந்த விவாதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வழக்கமான அரசியல்வாதிகள்போல் தனிமனித தாக்குதல்கள் இல்லாமல் கருத்துரீதியாக வேட்பாளர்கள் தங்களது பேச்சு மூலம் மோதிக்கொண்டனர். ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணியின் வேட்பாளர் மோஹித் மற்றும் பிர்சா அம்பேத்கர், பூலே மாணவர் சங்கத்தின் வேட்பாளர் ராம் ஆகியோருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஜே.என்.யு-வில் இன்னொரு சிறப்பு வாய்ந்த விஷயம் மாணவர் சங்கத் தேர்தலின்போது நடைபெற்ற வேட்பாளர்களுக்கான விவாதம். மற்ற கல்லூரி மாணவர்களும் இதனைக் காண வந்திருந்தார்கள். விவாதத்தைக் காண வந்திருந்த ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், ‘‘எங்கள் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில்தான் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அங்கு பணபலமே வெற்றியைத் தீர்மானித்தது. வேட்பாளர்கள் லட்சக்கணக்கில் தேர்தலுக்காகச் செலவு செய்தனர். ஆனால், இங்கோ நேர்மையான முறையில் முற்றிலும் பணபலம் இல்லாமல் தேர்தல் நடைபெறுகிறது” என்றார்.

புதுடெல்லியின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான, ‘டெல்லி பல்கலைக்கழக’ மாணவர் சங்கத் தேர்தலும் இன்று (9-9-16) நடைபெற உள்ளது. பெரும்பாலும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் போட்டி போடும் இந்தத் தேர்தலில் சுமார் 50 கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வாக்களிக்கின்றனர். ஆனால், மற்ற மாணவர் சங்கத் தேர்தல் மற்றும் அரசியல் போல் இல்லாமல் ஜே.என்.யு தனித்து நிற்கிறது.


இதுகுறித்து BAPSA-வின் தலைவர் வேட்பாளர் ராகுல், ‘‘இது மதவாத மற்றும் பாசிச சக்திகளுக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கும் இடையே நடக்கும் ஒரு போட்டி. இதில், வெல்லப்போவது ‘கபாலி’தான்’’ என்றார். இடதுசாரி கூட்டணியை, கொள்கைரீதியாக இவர்கள் எதிர்த்தாலும் சில பிரச்னைகளில் ஒன்றாகப் போராடுகின்றனர். ஜே.என்.யு-வில் ஒரு புதிய உதயமாகவும், ஒரு மாற்றாகவும் பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் பார்க்கப்படுகிறது. சென்ற மாத இறுதியில் ஜே.என்.யு-வில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அன்புமணி ராமதாஸை எதிர்த்துக் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தது இந்த அமைப்புத்தான்.

கடந்த ஆண்டு இரண்டு பதவிகளுக்கு மட்டும் போட்டியிட்ட பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் (BAPSA), இந்த வருடம் அனைத்துப் பதவிகளுக்கும் தனித்துப் போட்டியிடுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அமைப்பாக இருக்கும் BAPSA, இந்தத் தேர்தலில் ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணிக்குப் போட்டியாகக் கருதப்படுகிறது.

ஜே.என்.யு மாணவர் சங்கத் தேர்தல் முற்றிலும் மாணவர்களால் நடத்தப்படுகிறது. இந்த முறை இஷிதா சர்மா என்ற ஆராய்ச்சி மாணவி தலைமைத் தேர்தல் அதிகாரியாகச் செயல்படுகிறார். முற்றிலும் ஜனநாயக முறைப்படி நடைபெறும் இந்தத் தேர்தல், பிற கல்லூரிகளில் வன்முறை, பணபலம் ஆகியவற்றுடன் நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தல்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இன்று நடைபெறும் தேர்தலின் முடிவுகள், வரும் 12-ம் தேதி வெளியிடப்படும்.

- க.ராஜவேலு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement