Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி நதிநீர் பங்கீடு சிக்கலுக்கு இதுதான் காரணமா...?


 

குடகிலிருந்து உற்பத்தியாகும் காவிரி, எத்தனை கிளைகளாகப் பிரிகிறதோ... அத்தனை கிளைகளாகவும் தமிழ்நாடு - கர்நாடகா இடையிலான அந்த நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையும் பெருக்கெடுத்துள்ளது. கர்நாடகத்தின் விவசாய எல்லையான மாண்டியாவில்தான் காவிரிப் பிரச்னை எழும்போதெல்லாம் உச்சக்கட்டப் பதற்றம் நீடிக்கும். கலவரங்களும் அங்குதான் அதிகம் நடக்கும். காவிரி ஹோரதா சமிதி அமைப்பு அங்குதான் கடையடைப்பை முதலில் அறிவித்தது. விவசாயிகளும் வன்முறைப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கர்நாடகத்துக்குத் தேவையான சோளம், கரும்பு மற்றும் நெல் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமும் அதுதான்.
 

போராட்டத்தில் பங்கெடுத்த விவசாயிகள் முன்வைத்த காரணம் இதுதான். “காவிரியைச் சுற்றியுள்ள நான்கு அணைகளிலும் மொத்தம் 57 டி.எம்.சி  தண்ணீர்தான் உள்ளது. இதில், 9 டி.எம்.சி, நிரந்தரச் சேமிப்பிலும்... 3 டி.எம்.சி நீர் ஆவியாதலிலும்போக மீதம் இருக்கும் நீரைப் பங்கிட்டுத் தமிழகத்துக்குத் தந்துவிட்டால் எங்களுக்குக் குடிக்க மட்டுமே நீர் இருக்கும். 15 டி.எம்.சி  நீர் தேவைப்படும் எங்கள் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கும். நீரின் தேவையை மாநில அரசு எப்படிச் சமாளிக்கும்?” என்பதே.

‘‘பெங்களூருவின் பெரும் பிரச்னை தண்ணீர்தான்!’’

மும்பையைச் சேர்ந்த இந்தியா ஸ்பெண்டிங் நிறுவனம் நடத்தியுள்ள சர்வே, மாண்டியா மாவட்ட மக்களுக்கான பதிலைத் தருகிறது. சர்வேயின்படி, ‘‘காவிரியிலிருந்து கர்நாடக எல்லை நகரமான பெங்களூருவுக்கு நாளொன்றுக்குத் திறந்துவிடப்படும் 1,400 மில்லியன் லிட்டர் நீரில், 600 மில்லியன் லிட்டர் அளவுக்கு அந்த நகரம் வீணடிக்கிறது. இவை, பெரும்பாலும் நீர் எடுத்துச்செல்லும் பெரும் குழாய்களிலும், சிறு குழாய்களிலும் ஏற்படும் பிரச்னையாலேயே ஏற்படுகிறது. அதாவது, மொத்தம் அந்த நகரத்துக்கு திறந்துவிடப்படும்  19 டி.எம்.சி  நீரில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் எந்தவித உபயோகத்திலும் இல்லாமல் பாழாகிறது’’ என்கிறது அந்த சர்வேயின் இறுதி அறிக்கை. இந்த சர்வே, கடந்த ஐந்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீணடிப்பைக் குறைத்தாலே மாண்டியா மாவட்டம் கேட்கும் 15 டி.எம்.சி  நீர் அல்லது நம் மாநிலம் இப்போது கேட்கும் அதே 15,000 கனஅடி நீருக்கான பதிலும் கிடைக்கலாம்.

ஒருவேளை, இந்த சர்வே எண்ணிக்கை அனைத்தும் மிகைப்படுத்தலாக இருக்குமோ என்கிற சந்தேகம் ஒரு புறம் எழுந்தால், பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யும் நடிகையுமான ரம்யா சென்ற வருடம், ‘எக்கனாமிக் டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘பெங்களூருவின் பெரும் பிரச்னை தண்ணீர்தான் என்றும், அதை அங்கு இருக்கும் குழாய்களைச் சரிசெய்தாலே நிவர்த்தி செய்துவிடலாம்’’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு பெரும் பிரச்னைக்குக் கிளைப் பிரச்னையாக இருக்கும் இதனை, எப்படி ஒரு மாநில அரசு அசட்டையாக ஒதுக்குகிறது?

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப்பின் காவிரி நதிநீரைப் பங்கீடு செய்வதற்காகக்கூடிய காவிரி நதிநீர் தீர்ப்பாயம், ‘அதனிடம் நதிநீர் இதுவரை திறக்கப்பட்ட அளவு... அணையில் சேமிப்பு போன்றவை குறித்து எந்தவித அறிக்கையும் கைவசம் இல்லாததால், வரும் செப்டம்பர் 19-ல் மீண்டும் கூடும்’ என அறிவிக்கப்பட்டது. நாளொன்றுக்கு மில்லியன் லிட்டர் கணக்கில் ஒரு மெட்ரோ நகரமே நீரை வீணடிக்கும் நிலையில் எங்கிருந்து அணையின் நீர்ப் போக்குவரத்துக் குறித்தான அறிக்கையை முன்வைக்க முடியும். இந்தியாவில் அதிகம் நீரை வீணடிக்கும் நகரங்களில் கொல்கத்தாதான் முதலிடம் வகிக்கிறதாம். இதேநிலை நீடித்தால் இரண்டாம் இடத்தில் இருக்கும் பெங்களூரு முதலிடத்துக்குத் தள்ளப்படும். 2017-லும் பிரச்னை இப்படியாகத் தொடரும்.

புள்ளிவிவரத் தகவல்: பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்.

- ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close