காவிரி விவகாரம்.... என்ன முடிவு செய்ய போகிறது கர்நாடகா...? | What decision will karnataka take on Apex court order?

வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (21/09/2016)

கடைசி தொடர்பு:19:09 (21/09/2016)

காவிரி விவகாரம்.... என்ன முடிவு செய்ய போகிறது கர்நாடகா...?


ர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 6 ஆயிரம் கன அடித்தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விடமுடியாது" என்று வழக்கம்போல  கூறியிருக்கிறார். சித்தராமையா மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு கட்சியின் அரசு கர்நாடகாவில் இருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருக்கும். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.


தமிழகத்துக்கு எதிரான நிலை

கர்நாடகாவில் எந்த ஆளும் கட்சி இருந்தாலும், காவிரி விவகாரத்தில் ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் எந்தவித நிலைக்கும் செல்லக்கூடும் என்பதால் ஆட்சியாளர்கள் எப்போதுமே தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுத்து வருகிறார்கள். காவிரி பிரச்னையில் இப்போது உச்சநீதிமன்றம் கூறிய உத்தரவையும் இப்போதைக்கு சித்தராமையா அரசு அமல்படுத்தாது.  அதாவது, சித்தராமையா தனியாக எந்த அறிவிப்பையும் செய்து விட முடியாது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றே தெரிகிறது. அதைத்தான் அவர் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இப்போதைக்கு தமிழகத்துக்கு தண்ணீர் வர வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.  


அமைச்சர்களிடத்தில் ஒற்றுமையில்லை

இன்னொரு புறம் கர்நாடகா அரசின் சட்ட நிபுணர்கள், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்துத் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், அமைச்சர்களில் பாதிப்பேர் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடக்கூடாது என்று முதல்வருக்கு அழுத்தம் தருகின்றனர். அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி அவர் தண்ணீர் திறந்து விட்டால் அது அவரது பதவிக்கு ஆபத்தாக முடியும்  என்கிறார்கள். தமது இந்த நிலை குறித்து அவர் காங்கிரஸ் மேலிடத்திலும் சித்தராமையா தெளிவுபடுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்போதைக்கு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு பெட்டிஷன் ஒன்றைத் தாக்கல் செய்ய சித்தராமையா அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. எனவே, எங்களால் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றோம் என்று சொல்ல உள்ளார்கள்.


மேலாண்மை வாரியத்தால் பீதி

உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை விட கர்நாடகா அரசுக்கு இப்போது கூடுதலாக இன்னொரு பீதி எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் கூறியிருப்பதுதான் கர்நாடகாவுக்கு இப்போதைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் பட்சத்தில், கர்நாடகா மாநிலத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, ஹேமாவதி, கபிணி, ஹாராங்கி ஆகிய அணைகளை நிர்வகிக்கும் பொறுப்பு மேலாண்மை வாரியத்துக்குச் சென்று விடும். இதனால். இப்போது போல, தண்ணீரை வைத்துக்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்றெல்லாம் கர்நாடகா அரசு பொய் சொல்ல முடியாது. அதனால்தான், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறது கர்நாடகா அரசு.


மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையே கர்நாடகா அரசு ஏற்கவில்லை. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை அனுமதிக் கூடாது என்பதில் கர்நாடகா அரசு உறுதியோடு இருக்கிறது. இதற்காக கர்நாடகா வரும் 24-ம் தேதி  சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்கட்சிகளின் ஆதரவுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவற்றி மத்திய அரசு க்கு அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு பல்வேறு பிரச்னைகளுக்காக இது போல சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய போதெல்லாம், அதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்கவே மத்திய அரசுக்கு வாய்ப்பிருக்கிறது. முற்றிலும் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றெல்லாம் மத்திய அரசு சொல்ல முடியாது என்று சொல்கிறார்கள். எனவே, எப்படிப் பார்த்தாலும் இப்போதைக்கு இல்லாவிட்டாலும், இன்னும் சில மாதங்கள் கழித்தாவது தமிழகத்துக்கு சாதகமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் கர்நாடகா அரசும், மத்திய அரசும் உள்ளது.

-கே.பாலசுப்பிரமணி
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்